துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.24.44 லட்சம் தங்கம் பறிமுதல்


துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.24.44 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 April 2021 9:18 PM GMT (Updated: 18 April 2021 9:18 PM GMT)

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.24.44 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பயணி ஒருவர், கைது செய்யப்பட்டார்.

மங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.24.44 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பயணி ஒருவர், கைது செய்யப்பட்டார்.

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் பஜ்பே சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த சர்வதேச விமானநிலையத்திற்கு துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. 

வெளிநாடுகளில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் தங்கம், வெளிநாட்டு பணம், போதைப்பொருள் கடத்தி வரப்படுவதும், அதனை தீவிர சோதனை நடத்தி சுங்கவரித்தறையினர் பறிமுதல் செய்து வருவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. அதுவும் சமீபத்தில் மங்களூரு விமான நிலையத்தில் தங்கம் கடத்துவது அதிகமாகி வருகிறது. 

தங்கம் பறிமுதல்

இந்தநிலையில் நேற்று மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அதேவிமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சுங்கவரித்துறையினருக்கு சந்தேகம் உண்டானது. இதையடுத்து அவரையும், அவரது உடைமையையும் சுங்கவரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். 

அப்போது அந்த நபர், காலணிக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் முகமது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 504 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.24 லட்சத்து 44 ஆயிரம் ஆகும். 

கைது

இதையடுத்து சுங்கவரித்துறை அதிகாரிகள் அபூபக்கர் சித்திக்கை, பஜ்பே போலீஸ் வசம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story