‘தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்’ மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்


‘தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்’ மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்
x
தினத்தந்தி 18 April 2021 9:39 PM GMT (Updated: 18 April 2021 9:39 PM GMT)

கொரோனா தடுப்பூசி வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிவேகம் எடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகளை தெரிவித்து பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரசுக்கு எதிரான நமது போராட்டத்தில் முக்கிய அம்சமாக, தடுப்பூசி போடும் வேகத்தை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும்.

எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று முற்றிலும் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கக்கூடாது. அதற்கு பதிலாக மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

கொள்கை முடிவு எடுங்கள்...

இந்தியா தற்போது அதன் மொத்த மக்கள் தொகையில் மிகச்சிறிய பகுதியினருக்கே தடுப்பூசி போட்டுள்ளது. சரியான கொள்கை முடிவு எடுத்து, நாம் இன்னும் சிறப்பாகவும், வேகமாகவும் செயல்பட முடியும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கு நாம் கண்டிப்பாக செய்வதற்கென நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் இந்த முயற்சியின் ஒரு பெரிய பகுதி, தடுப்பூசி திட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதுதான்.

பகிரங்கமாக அறிவியுங்கள்...

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு மனப்பான்மையில், கவனத்தில் கொள்வதற்காக எனது யோசனைகளை உங்களின் பரிசீலனைக்காக அனுப்புகிறேன். இதிலும், செயல்பாட்டிலும் நான் எப்போதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

அடுத்த 6 மாதங்களில் வழங்குவதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசிக்கான ஆர்டர்கள் குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் எவ்வாறு வினியோகிக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story