மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி பிரசாரம் திடீர் ரத்து


மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி பிரசாரம் திடீர் ரத்து
x
தினத்தந்தி 18 April 2021 10:56 PM GMT (Updated: 18 April 2021 10:56 PM GMT)

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீரென ரத்து செய்துள்ளார்.

புதுடெல்லி, 

மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆளுகிற மேற்கு வங்காள மாநிலத்தில், சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.

அங்கு மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17 என ஐந்து கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன.

ஏப்ரல் 22, 26 மற்றும் 29 என இன்னும் மூன்று கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன.

இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று , நாட்டையே மிரட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

ராகுல் காந்தி ரத்து

கொரோனா தொற்று பரவல் காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் பிரசாரத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.இதையொட்டி அவர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலால், மேற்கு வங்காளத்தில் நான் பங்கேற்கவிருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்துள்ளேன்.

தற்போதைய சூழ்நிலைகளில், பெரிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்தினால், என்ன ஆகும் என அதன் விளைவுகள் பற்றி எல்லா அரசியல் தலைவர்களும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மற்ற தலைவர்கள் ரத்து செய்வார்களா?

இதனால் ராகுல் காந்தியைப் பின்பற்றி அங்கு மற்ற தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story