இந்தியாவில் 92 நாளில் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அமெரிக்கா, சீனாவை விட வேகம்


இந்தியாவில் 92 நாளில் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அமெரிக்கா, சீனாவை விட வேகம்
x
தினத்தந்தி 18 April 2021 11:37 PM GMT (Updated: 18 April 2021 11:37 PM GMT)

இந்தியாவில் 92 நாளில் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த வகையில் , நமது நாடு தடுப்பூசி போடுவதில் அமெரிக்கா, சீனாவை விட வேகம் கண்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் வாரம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் ஜனவரி மாதம் 16-ந் தேதி நடைமுறைக்கு வந்தது.

அந்த வகையில் 92 நாளில் நாட்டில் 12 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 590 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது நேற்று காலை 7 மணி நிலவரம் ஆகும்.

இந்த எண்ணிக்கையிலான தடுப்பூசியை செலுத்துவதற்கு அமெரிக்காவில் 97 நாட்களும், சீனாவில் 108 நாட்களும் ஆயின. எனவே இவ்விரு நாடுகளைக் காட்டிலும் இந்தியா தடுப்பூசி போடுவதில் வேகம் காட்டுவது நிரூபணமாகி இருக்கிறது.

சுகாதார பணியாளர்கள்

நாட்டில் சுகாதார பணியாளர்களை பொறுத்தமட்டில் 91 லட்சத்து 28 ஆயிரத்து 146 பேருக்கு முதல் டோசும், 57 லட்சத்து 8 ஆயிரத்து 223 பேருக்கு இரண்டாவது டோசும் போடப்பட்டுள்ளது.

1 கோடியே 12 லட்சத்து 33 ஆயிரத்து 415 முன்களப்பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 55 லட்சத்து 10 ஆயிரத்து 238 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது.

60 வயதுக்கு மேற்பட்ட 4 கோடியே 55 லட்சத்து 94 ஆயிரத்து 522 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 38 லட்சத்து 91 ஆயிரத்து 294 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

45-60 வயதினரில் 4 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 993 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 10 லட்சத்து 81 ஆயிரத்து 759 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

8 மாநிலங்கள் முக்கிய பங்கு

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 59.5 சதவீதத்தினர் 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மராட்டியத்தில் 1 கோடியே 21 லட்சத்து 39 ஆயிரத்து 453 பேரும், உத்தரபிரதேசத்தில் 1 கோடியே 7 லட்சத்து 12 ஆயிரத்து 739 பேரும், ராஜஸ்தானில் 1 கோடியே 6 லட்சத்து 98 ஆயிரத்து 771 பேரும், குஜராத்தில் 1 கோடியே 3 லட்சத்து 37 ஆயிரத்து 448 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

நேற்று காலை 7 மணியுடன் முடிந்த ஒரு நாளில் மட்டுமே 26 லட்சத்து 84 ஆயிரத்து 956 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில் 20 லட்சத்து 22 ஆயிரத்து 599 பேர் முதல் டோசும், 6 லட்சத்து 62 ஆயிரத்து 537 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story