இந்தியாவில் கொரோனா பரவலில் புதிய உச்சம் ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று


இந்தியாவில் கொரோனா பரவலில் புதிய உச்சம் ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 18 April 2021 11:40 PM GMT (Updated: 18 April 2021 11:40 PM GMT)

இந்தியாவில் கொரோனா பரவலில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் இன்னும் இந்தியாவில் தன் கோர முகத்தைக்காட்டிக் கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பூசி திட்டம் என பல உத்திகள் வகுத்து தொற்று பரவலை தடுக்க முயற்சித்தபோதும், எதற்கும் கட்டுப்படாமல் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று தொடர்ந்து 4-வது நாளாக 2 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா தனது பிடியில் சிக்க வைத்துள்ளது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது இதுவரை காணப்படாத புதிய உச்சம் என்பது பதிவு செய்யத்தக்கதாகும்.

நாட்டில் இதுவரை 1 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

புதிதாக 1,501 பேர் பலி

கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படுகிற உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பது கவலைதரக்கூடிய அம்சமாக மாறி வருகிறது.

நேற்று முன்தினம் 1,341 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,501 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு இரையானோர் மொத்த எண்ணிக்கையானது 1 லட்சத்து 77 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பலியான 1,501 பேரில் 419 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். டெல்லியில் 167 பேரும், சத்தீஷ்காரில் 158 பேரும், உத்தரபிரதேசத்தில் 120 பேரும் கொரோனாவின் பிடியில் இருந்து மீள முடியாமல் மரணத்தை தழுவி இருக்கிறார்கள்.

இருப்பினும் நேற்று அருணாசலபிரதேசம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 9 சிறிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கொரோனா உயிரிழப்பில் இருந்து தப்பின.

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.20 சதவீதம் ஆகும்.

1.38 லட்சம் பேர் மீட்பு

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1 லட்சத்து 38 ஆயிரத்து 423 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். இதுவரை இப்படி நாட்டில் மொத்தம் 1 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 643 பேர் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகபட்ச எண்ணிக்கையாக மராட்டிய மாநிலத்தில் 56 ஆயிரத்து 783 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் 15 ஆயிரத்து 414 பேரும், சத்தீஷ்காரில் 9,828 பேரும் கொரோனா தொற்று பிடியில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 86.62 சதவீதம் என மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

புதிதாக சிகிச்சையில் 1.21 லட்சம் பேர்

இந்தியாவில் நேற்று தொடர்ந்து 39-வது நாளாக சிகிச்சையில் சேருவோர் எண்ணிக்கை ஏறுமுகம் கண்டுள்ளது. அந்த வகையில் நேற்று மட்டுமே புதிதாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 576 பேர் புதிதாக கொரோனா மீட்புக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து ஆயிரத்து 316 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 12.18 சதவீதம் ஆகும்.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிற மராட்டியத்தில் மட்டுமே 6 லட்சத்து 49 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை பெறுகின்றனர். உத்தரபிரதேசத்தில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 59 பேரும், சத்தீஷ்காரில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 400 பேரும், கர்நாடகத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 179 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 லட்சத்து 66 ஆயிரத்து 394 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.

Next Story