தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் பரிதாபம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி + "||" + 6 corona patients die due to abject oxygen deficiency in Madhya Pradesh

மத்திய பிரதேசத்தில் பரிதாபம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி

மத்திய பிரதேசத்தில் பரிதாபம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
போபால், 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை தவிர்க்க, அதைப் பயன்படுத்துவதில் கவனமாக இருப்பதுடன், அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார்.

இருப்பினும் இதற்கு மத்தியில் மராட்டிய மாநிலம், நாலசோப்ராவில் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 கோரோனா நோயாளிகள் கடந்த சில தினங்களுக்கு முன் பலியாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் 6 நோயாளிகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியாகி உள்ள தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசு ஆஸ்பத்திரியில்6 நோயாளிகள் பலி

மத்திய பிரதேச மாநிலம், ஷாடோல் நகரில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா பராமரிப்பு தீவிர சிகிச்சை வார்டில் 62 நோயாளிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் 6 பேர் நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன்பற்றாக்குறையால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதை அந்த மருத்துவ கல்லூரியின் முதல்வர் மிலிந்த் சிரால்கர் உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில் மற்ற நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

வினியோகத்தில் தட்டுப்பாடு

இதுபற்றி ஷாடோல் நகர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் மிலிந்த் சிரால்கர் கூறியதாவது:-

6 நோயாளிகள் திரவ ஆக்சிஜனின் குறைந்த அழுத்தம் காரணமாக இறந்தனர். இது தொடர்பாக நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணங்கள் கண்டறியப்படும்.

எங்கள் ஆஸ்பத்திரிக்கு திரவ ஆக்சிஜன் வினியோகம் நேற்று மாலை (நேற்று முன்தினம் மாலை) நின்று விட்டது. வினியோகஸ்தர்களை தொடர்பு கொண்டோம். ஆனால் ஆக்சிஜன் வாகனம் இரவு நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் வளாகத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் ஆலையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் லிட்டர் மட்டுமே இருப்பு வைக்க முடியும். பிற மாநிலங்களில் இருந்துதான் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.

எங்கள் ஆஸ்பத்திரியில் 62 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. அவற்றில் கொரோனாவின் தீவிர பாதிப்பில் உள்ள நோயாளிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கமல்நாத் சாடல்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலியாகி இருப்பதை முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் சாடி உள்ளார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலியாகி இருக்கும் வேதனையான தகவல் ஷாடோலில் இருந்து வந்துள்ளது. போபால், இந்தூர், உஜ்ஜைனி, சாகர், ஜபல்பர், காண்ட்வா, கார்சோன் ஆகிய இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் நிகழ்ந்தும்கூட அரசு ஏன் விழித்துக்கொள்ளவில்லை? நிலைமை அச்சம் தருவதாக உள்ளது. கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் ஊசிகளுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த மருந்தும் சரி, ஆக்சிஜனும் சரி இருப்பு உள்ளதாக காகிதத்தில்தான் உள்ளது. உண்மையில் இல்லை” என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; கொத்தனார் பலி
கும்மிடிப்பூண்டி பகுதியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கொத்தனார் பலியானார்.
2. மாங்காய் பறித்தபோது பரிதாபம் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி
மாங்காய் பறித்தபோது அருகில் இருந்த மின்சார ‘டிரான்ஸ்பார்மரில்’ கை உரசியதில் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
3. இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒரே நாளில் நேற்று 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
4. புதுச்சேரியில் வேகமாக பரவும் தொற்று; ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு; 18 பேர் பலியான பரிதாபம்
புதுவையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியானார்கள். 1,819 பேர் பாதிக்கப்பட்டனர்.
5. பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து பட்டா கத்தியால் தாக்கிய சிறுவன்; 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாப சாவு
பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் சிறுவன் புகுந்து பட்டா கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.