தடுப்பூசிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பொய் பிரசாரம் ;மன்மோகன் சிங் கடிதத்துக்கு ஹர்ஷ் வர்தன் பதில்


Image courtesy : @drharshvardhan
x
Image courtesy : @drharshvardhan
தினத்தந்தி 19 April 2021 11:17 AM GMT (Updated: 19 April 2021 11:45 AM GMT)

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி, பல உயிர்களோடு விளையாடி வருகிறார்கள் என மன்மோகன் சிங் எழுதிய கடிதத்துக்கு ஹர்ஷ் வர்தன் பதில் அளித்து உள்ளார்.

புதுடெல்லி

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை எதிா்கொள்வதற்கு பா.ஜனதா  தலைமையிலான மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், பிரதமா் மோடிக்கு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் எழுதியிருந்த கடிதத்தில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி திட்டமே முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டில் எத்தனை பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை கவனிக்காமல், மொத்த மக்கள்தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில் குறைந்த சதவீதத்திலான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும். தற்போது 45 வயதைக் கடந்தவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்குக் குறைவாக உள்ள ஆசிரியா்கள், பேருந்து ஓட்டுநா்கள், வழக்கறிஞா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

யாருக்கெல்லாம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதை நிா்ணயிக்கும் உரிமை மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகின்றன என்பது தொடா்பான விவரங்களை மத்திய அரசு அவ்வப்போது வெளியிட வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, பலா் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். வாழ்க்கை எப்போது இயல்புநிலைக்குத் திரும்பும் என அவா்கள் எதிா்பாா்த்து வருகின்றனா். எனவே, மேற்கண்ட பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மன்மோகன் சிங் எழுதிய கடிதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலளித்துள்ளார்.

மன்மோகன் சிங் எழுதிய கடிதத்துக்கு ஹர்ஷ் வர்தன் அளித்திருக்கும் பதிலில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவதற்கு பதில், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவது அவசியம் என்று ஒப்புக் கொண்டதை வரவேற்ற ஹர்ஷ் வர்தன், பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பொதுமேடைகளில், தடுப்பூசிக்கு எதிராக சந்தேகம் எழுப்புவதால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தடுப்பூசி எண்ணிக்கை தேசிய அளவிலான விகிதத்தை விடவும் குறைவாக உள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தடுப்பூசியின் அளவும் குறைவாகவே உள்ளது.

மேலும், உங்கள் கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள், உங்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட மாநில அரசுகளே, உங்கள் கருத்துகளை பின்பற்றி நடப்பதாகத் தெரியவில்லை.

இதுவரை, கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானிகளைப் பாராட்டி காங்கிரஸ் கட்சியினர் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, கொரோனா தடுப்பூசி குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி, பல உயிர்களோடு விளையாடி வருகிறார்கள் என்று பதிலளித்துள்ளார்.

Next Story