கர்நாடகத்தில் கொரோனா பரவலை மாநில அரசால் தடுக்க முடியவில்லை; கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு


கர்நாடகத்தில் கொரோனா பரவலை மாநில அரசால் தடுக்க முடியவில்லை; கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 April 2021 1:56 PM GMT (Updated: 19 April 2021 1:56 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை மாநில அரசால் தடுக்க முடியவில்லை என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

அதிக கட்டணம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கொரோனா 2-வது அலை மிகப்பெரிய அளவில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசால் முடியவில்லை.

இந்த விஷயத்தில் தனது தோல்விகளை மூடிமறைக்க அரசு முயற்சி செய்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் இல்லை. தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அந்த அளவுக்கு செலவு செய்யும் திறன் சாமானிய மக்களுக்கு இல்லை. ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன.

கட்டுப்பாடுகள் இல்லை

முதல்-மந்திரி எடியூரப்பா ஆஸ்பத்திரியில் உள்ளார். கர்நாடக பா.ஜனதா அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு கொரோனா தாக்கியபோது, அது எதிர்பாராத தொற்று நோயாக இருந்தது. கடந்த ஓராண்டு அனுபவத்தை வைத்து அரசு சுகாதார வசதிகளை பலப்படுத்தி இருக்க வேண்டும். கொரோனாவை தனது ஊழலுக்கு பயன்படுத்திக் கொண்ட பா.ஜனதா அரசு இப்போது கைக்கட்டி உட்கார்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை மந்திரிகள் மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே மீறுகிறார்கள். அவர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

இவ்வாறு அதில் சித்தராமையா குறிப்பிட்டு உள்ளார்.


Next Story