தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது


தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 19 April 2021 11:13 PM GMT (Updated: 19 April 2021 11:13 PM GMT)

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரி, 

புதுவையில் சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நாளுக்குநாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ந்தேதி அன்று 127 ஆக இருந்த தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து புதுப்புது உச்சத்தை தொட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) தொற்று பாதிப்பு 565 என்றும், ஒரேநாளில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆகவும் பதிவாகி உள்ளது.

இரவுநேர ஊரடங்கு

தொற்று குறையாததை தொடர்ந்து தமிழகத்தில் இன்று (செவ்வாயக்்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுவையிலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

* இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது.

* கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படலாம்.

* உணவு விடுதிகள் காலை முதல் மாலை வரை வழக்கம் போல் செயல்படலாம். இரவு 8 மணிக்குப்பின் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். உணவு விடுதிகள், மதுக்கடைகள் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் இதேபோன்று ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவிலும்

இரவுநேர ஊரடங்கு

இதுபோல், கேரள மாநிலத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல், இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். கேரள அரசின் தலைமை செயலாளர் வி.பி.ஜாய் தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. கேரளாவுக்கு வரும் வெளிமாநிலத்தினர் ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 18 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story