ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு தொற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1½ கோடியை தாண்டியது


ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு தொற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1½ கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 19 April 2021 11:17 PM GMT (Updated: 19 April 2021 11:17 PM GMT)

இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 1½ கோடியை தாண்டியது. ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 1,619 பேர் பலியாகி உள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் தொடர்ந்து 40-வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும், கடந்த 5 நாட்களாக 24 மணி நேர கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி வருகிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த ஒரு நாளில் நாடு முழுவதும் புதிதாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர். வழக்கம்போல், மராட்டிய மாநிலத்தில் அதிக அளவாக 68 ஆயிரத்து 631 பேருக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது.

1½ கோடியை தாண்டியது

இத்துடன் சேர்த்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1½ கோடியை தாண்டி விட்டது. 1 கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு டிசம்பர் 19-ந்தேதி 1 கோடியே தொட்டது. அதன்பிறகு 107 நாட்கள் கழித்து கடந்த 5-ந்தேதிதான் 1 கோடியே 25 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்தது. ஆனால், வெறும் 15 நாட்களில் 25 லட்சம் அதிகரித்து, 1½ கோடி ஆகியுள்ளது.

கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை 1 கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 821 பேர் குணமடைந்துள்ளனர். இது, மொத்த பாதிப்பில் 86 சதவீதமாகும்.

சிகிச்சையில் 19 லட்சம் பேர்

ஆனால், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 1,619 பேர் பலியாகி உள்ளனர். மராட்டிய மாநிலத்தில் அதிக அளவாக 503 பேரும், சத்தீஷ்காரில் 170 பேரும், டெல்லியில் 161 பேரும், உத்தரபிரதேசத்தில் 127 பேரும், குஜராத் மாநிலத்தில் 110 பேரும் பலியாகி உள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் மட்டும் 60 ஆயிரத்து 473 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story