மே மாதம் 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி மருந்து கடைகளில் விற்கவும் மத்திய அரசு அனுமதி


மே மாதம் 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி மருந்து கடைகளில் விற்கவும் மத்திய அரசு அனுமதி
x
தினத்தந்தி 20 April 2021 12:45 AM GMT (Updated: 20 April 2021 12:10 AM GMT)

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடுவதற்கான வயது வரம்பை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

புதுடெல்லி, 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா புயல் சமீப நாட்களாக இந்தியாவில் மையம் கொண்டிருக்கிறது.

2-வது அலை

நாடு முழுவதும் அது உருவாக்கிய முதல் அலை 1 கோடிக்கு மேற்பட்ட பாதிப்புகளையும், 1½ லட்சத்துக்கு மேற்பட்ட மரணங்களையும் அளித்தது.

அந்த அலை முழுவதுமாக ஓய்வதற்குள் 2-வது அலை எழுந்திருக்கிறது. முதல் அலையை விட பல மடங்கு வீரியமாக அடித்து வரும் இந்த அலை லட்சக்கணக்கான மக்களை தினந்தோறும் வாரிச்சுருட்டி அசரடிக்கிறது.

இந்த கொடூர அலையில் சிக்கியவர்களில் பலரும் மாண்டு வருகின்றனர். அந்தவகையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களை தினந்தோறும் காவு கொண்டு வருகிறது, இந்த கொரோனா சுனாமி.

ஆஸ்பத்திரிகள் திண்டாட்டம்

லட்சக்கணக்கில் தினந்தோறும் பாதிக்கப்படும் நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் மருத்துவமனைகள் திக்குமுக்காடுகின்றன. உள்ளே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் மருத்துவமனை நிர்வாகங்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

கொலைகார தொற்றிடம் மண்டியிட்டு உயிரிழக்கும் உடல்களை எரிக்கவோ, புதைக்கவோ முடியால் சுடுகாட்டு வளாகங்கள் திணறி வருகின்றன.

கொரோனாவின் இத்தகைய கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் பயங்கரமான சூழல் ஏற்பட்டு உள்ளது.

மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கை

இந்த நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவுக்கும், மக்களுக்குமான இடைவெளியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதேநேரம் மத்திய அரசோ, இந்தியாவில் கொரோனா நுழைந்த காலம் முதலே மிகவும் விழிப்பாக இருந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தற்காலிக நடவடிக்கைகளாக பல்வேறு தடைகள், முடக்கங்கள், கட்டுப்பாடுகள் போன்றவற்றை அமல்படுத்தியது.

தடுப்பூசி திட்டம்

மேலும் கொரோனாவை நாட்டில் இருந்தே வெளியேற்றுவதற்காக தடுப்பூசி போடும் பணிகளை செயல்படுத்தி, அதை துரிதப்படுத்தியும் வருகிறது. சுகாதார பணியாளர்கள், முன்கள வீரர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் என அடுத்தடுத்து பயனாளிகளை அடையாளம் கண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு மத்திய அரசின் இந்த அயராத முயற்சியாலும், தடுப்பூசி பணிகளுக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தாலும் உலகிலேயே மிகவும் வேகமாக தடுப்பூசி போட்டு வரும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தற்போது நாட்டில் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. எனவே நாட்டு மக்களை தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்காக மீண்டும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் தீவிர ஆலோசனை

இந்த பணிகளில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா ஒழிப்புக்காக பல்வேறு துறை வல்லுனர்கள், முதல்-மந்திரிகள், கவர்னர்கள் என பல தரப்பினருடனும் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அந்த வரிசையில் நேற்று ஒரே நாளில் பல கூட்டங்களை நடத்தினார். குறிப்பாக, ஆக்சிஜன், மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்காக பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுடன், செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து நாட்டின் முக்கிய டாக்டர்களை மெய்நிகர் முறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டில் தொற்று நிலவரம், தடுப்பூசி பணிகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினார்.

நாட்டின் 2-ம், 3-ம் அடுக்கு நகரங்களிலும் தொற்று வேகமாக பரவி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தங்கள் உடன் பணியாற்றும் டாக்டர்களை தொடர்பு கொண்டு அனைத்து வழிமுறைகளையும் சரியாக பின்பற்ற கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசிதான் எனக்கூறிய பிரதமர் மோடி, எனவே மேலும் அதிகமான பயனாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என டாக்டர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் தடுப்பூசிக்கு எதிரான வதந்திகள் பரவுவதை நிறுத்துவதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் டாக்டர்கள் மேற்கொள்ள வலியுறுத்தினார்.

பின்னர் நாட்டின் முக்கியமான மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் அதிபர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

இதைத்தொடர்ந்து சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதில் பெருகி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதை சுகாதார அமைச்சகம் பின்னர் அறிவித்தது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நேரடியாக வாங்கலாம்

நாடு முழுவதும் மே 1-ந் தேதி முதல் 3-வது கட்ட தடுப்பூசி திட்டப்பணிகள் அமல்படுத்தப்படுகிறது. இதில் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்.

மேலும் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநிலங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தொழில்துறைகள் நேரடியாகவே தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மத்திய மருந்து ஆய்வகத்தில் வழங்கும் மாதாந்திர அளவுகளில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்குவார்கள். மீதமுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும், திறந்த சந்தையிலும் வழங்க முடியும்.

விலையை வெளியிட வேண்டும்

அப்படி மாநிலங்கள் மற்றும் திறந்தவெளி சந்தைகளுக்கு கொடுக்கும் தடுப்பூசியின் விலையை மே 1-ந் தேதிக்கு முன் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் வெளியிட வேண்டும். அந்த விலையின் அடிப்படையில் மாநில அரசுகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தொழில்துறைகள் வாங்கிக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனைகள் மத்திய அரசு தொகுப்பு வழியாக வருவதைத் தவிர மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 சதவீத வினியோகத்தில் இருந்து தனியாக வாங்க வேண்டும். மேலும் தனியார் தடுப்பூசி வினியோகிஸ்தர்கள் தங்களது தடுப்பூசி விலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அதேநேரம் மத்திய அரசு தடுப்பூசி மையங்களில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

பிரதமர் மோடி தகவல்

குறைந்த நேரத்தில் அதிகமான பயனாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடினமாக உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் உலக அளவில் சாதனை அளவான வேகத்தில் இந்தியா தடுப்பூசி போட்டு வருவதாகவும், இதை இன்னும் அதிக வேகத்துடன் தொடர்வோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மருந்து கடைகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்து வந்தன. தற்போது இதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்திருக்கும் தகவல் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவதை தொடர்ந்து திறந்த வெளிவிற்பனைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தடுப்பூசி மருந்துகள் இனி மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story