கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் குடும்பங்களின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது: பிரதமர் மோடி உரை


கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் குடும்பங்களின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது:  பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 20 April 2021 3:42 PM GMT (Updated: 20 April 2021 3:42 PM GMT)

கொரோனா பாதிப்புகளால் தங்களது அன்புக்குரியோரை இழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொண்டார்.

புதுடெல்லி,

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது.  கடந்த 15ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு புதிய உச்சமடைந்து வருகின்றன.  இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு 2.73 லட்சமாக பதிவாகி உச்சம் தொட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது.

ஒருபுறம் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  மறுபுறம் கொரோனா கட்டுப்பாடுகளும் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி டாக்டர்களுடன் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொண்டார்.  அதன்பின்னர் நாட்டிலுள்ள முன்னணி மருந்து நிறுவனங்களுடன் மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வழியே ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டுக்கு விலைமதிப்பில்லா சேவை செய்து வரும் மருத்துவர்கள், மருத்துவ மற்றும் துணை மருத்துவ பணியாளர்களுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

இதன்பின் பேசிய அவர், நாட்டில் 2வது கொரோனா அலை வீசி வருகிறது.  கொரோனாவுக்கு எதிரான போரில் மிக பெரிய ஆயுதம் தடுப்பூசி.  அதனால், அதிக அளவிலான நோயாளிகளை தடுப்பூசி போட்டு கொள்ளும்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், டாக்டர்களுடன் உரையாடிய  பிரதமர் மோடி, கொரோனாவின் புதிய அலை டையர் 2 மற்றும் டையர் 3 ஆகிய நகர பகுதிகளில் விரைவாக பரவி வருகிறது.  அந்த பகுதிகளில் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் மற்றும் அதற்கான வளங்களை மேம்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விடும்படி கேட்டு கொண்டார்.

இந்த உரையாடலில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் எதிர்கொண்டு வரும் விசயங்களை டாக்டர்கள் பகிர்ந்து கொண்டனர்.  சுகாதார நல உட்கட்டமைப்புகளை எப்படி மேம்படுத்தி வருகிறோம் என்பது பற்றியும் அவர்கள் பேசினர்.  இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பில்லாத நோயாளிகளுக்கான சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது பற்றியும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

பிரதமர் மோடி பேசும்பொழுது, கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு விவரங்கள் பற்றிய பல்வேறு வதந்திகளுக்கு எதிராக மக்களுக்கு அதுபற்றிய கல்வியை ஊட்ட வேண்டும்.  மக்கள் அச்சத்திற்கு இரையாக கூடாது என்பது மிக முக்கியம்.

இதற்கு முறையான சிகிச்சையோடு கூட, சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவதும் அவசியம் என கூறிய பிரதமர் மோடி, நெருக்கடியான நிலை இல்லாத சூழலில் பிற நோய்களுக்கான சிகிச்சைக்காக தொலைதூர மருத்துவ முறையையும் பின்பற்றுங்கள் என்று மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். 

இந்நிலையில், நாட்டின் முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.  இந்த சூழலில், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8.45 மணியளவில் உரையாற்றினார்.

அவர் பேசும்பொழுது, கொரோனா தொற்றின் 2வது அலையை நாம் சந்தித்து வருகிறோம்.  உங்களுடைய வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  கொரோனா பாதிப்புகளால் தங்களது அன்புக்குரியோரை இழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

நமக்கு முன்னால் மிக பெரிய சவால் உள்ளது.  நம்முடைய தைரியம், தயார் நிலை மற்றும் தீர்வு காணும் திறன் ஆகியவற்றால் அதனை வெற்றி கொள்ள வேண்டும்.

நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்து உள்ளது.  தேவைப்படும் அனைவருக்கும் ஆக்சிஜன் கிடைக்க செய்வதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை ஈடுபட்டு வருகிறது.  அந்த நோக்கில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.


Next Story