கொரோனா பாதித்த மருத்துவர் வெளியிட்ட கடைசி பதிவு: சமூக வலைதளங்களில் வைரல்


கொரோனா பாதித்த மருத்துவர் வெளியிட்ட கடைசி பதிவு: சமூக வலைதளங்களில் வைரல்
x
தினத்தந்தி 21 April 2021 3:24 PM GMT (Updated: 21 April 2021 3:24 PM GMT)

“இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’ என கொரோனா பாதித்த மருத்துவர் வெளியிட்ட கடைசி பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை,

மும்பையைச் சேர்ந்த காசநோய் நிபுணர் டாக்டர் மனிஷா ஜாதவ் சேவ்ரி டிபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாக செயல்பட்டு வந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 51 வயதான மனிஷா கடந்த திங்கட்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தான் பிழைக்கமாட்டேன் என்பதை உணர்த்தும் விதமாக, இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம். இங்கு உங்களை நான் மீண்டும் சந்திக்க முடியாமல் போகலாம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உடல் இறக்கலாம்; ஆனால் ஆத்மா அல்ல. ஆத்மா அழியாதது என்று பதிவிட்டிருந்தார்.

இந்த போஸ்ட்டை பதிவுசெய்த 36 மணிநேரத்தில் அவர் உயிரிழந்தது குறித்து பல மருத்துவர்களும், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

முகக்கவசம் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடியுங்கள் என மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் திருப்தி கிலாடா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டு வீடியோவில் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லை என்றும் ஆக்சிஜன் இல்லை என்றும் கூறியுள்ளார். தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஆதரவின்றி நிற்கதியாக நிற்கிறோம் என கண்ணீர் மல்க கூறியிருக்கும் திருப்தி கிலாடா, தங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story