14 பேரின் உயிரை பறித்த மும்பை தீ விபத்தின் போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர், காப்பாற்ற யாருமில்லை; உறவினர்கள் குற்றச்சாட்டு


14 பேரின் உயிரை பறித்த மும்பை தீ விபத்தின் போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர், காப்பாற்ற யாருமில்லை; உறவினர்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 April 2021 10:15 PM GMT (Updated: 23 April 2021 10:15 PM GMT)

தீ விபத்து நடந்த போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் தூங்கி கொண்டு இருந்தனர். நோயாளிகளை காப்பாற்ற யாருமில்லை என அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

காப்பாற்ற ஒருவா் கூட இல்லை

விராரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் ஏ.சி. பெட்டி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், 14 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் தீ விபத்து நடந்த போது அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தூங்கி கொண்டு இருந்ததாகவும், நோயாளிகளை காப்பாற்ற யாரும் இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது குறித்து விபத்தில் உயிரிழந்த நோயாளி ஒருவரின் குடும்பத்தினர் கூறுகையில், இது அனைத்தும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் தவறாகும். தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்த போது ஊழியர்கள் தூங்கி கொண்டு இருந்தனர். நோயாளிகளை மீட்டு வெளியே கொண்டுவர அவசர சிகிச்சை பிரிவில் ஒரு ஊழியர் கூட இல்லை, என்றனர்.

இதேபோல மற்றொரு நபர் கூறுகையில், ‘‘ஆஸ்பத்திரியில் தீ அணைப்பான் போன்ற அடிப்படை தீத்தடுப்பு உபகரணங்கள் கூட போதுமான அளவில் இல்லை. பின்னர் ஏன் இவர்கள் ஆஸ்பத்திரி நடத்துகிறார்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

பெண் டாக்டர் வேதனை

இதேபோல விபத்தில் தாயை பறிகொடுத்த பெண் டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

ேநாய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த எனது தாயை நான் இழந்துவிட்டேன். தீ தடுப்பு விதிகளை பின்பற்றி இருந்தால் அவர் காப்பாற்றப்பட்டு இருப்பார். சிறந்த சிகிச்சைக்காக நானே எனது தாயை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தேன். இப்போது நான் எனது தாயை எங்கே போய் தேடுவேன். தீ விபத்து நடந்த பிறகு மாடிக்கு சென்று பாா்த்த போது, உடல்கள் கரிக்கட்டையாக கிடந்தன.

இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.

இதேபோல விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஏ.சி. வேலை செய்யவில்லை

இதற்கிடையே ஏ.சி. வெடித்ததால் ஆஸ்பத்திரியில் தீ விபத்து நடந்தது தெரியவந்தது. அந்த ஏ.சி. வேலை செய்யாமல் இருந்ததாக அங்கு வேலை பார்க்கும் சுப்ரியா தேஷ்முக் என்ற ஊழியர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘நேற்று மதியம் நான் ஆஸ்பத்திரிக்கு சென்ற போது கொரோனா வார்டில் ஏ.சி. வேலை செய்யவில்லை. எனவே அதை சரிசெய்யும் வேலை நடந்து கொண்டு இருப்பதை நான் பார்த்தேன். அப்போது ஏ.சி. பேனல் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகம் நோயாளிகளுக்கு சில மின்விசிறிகளை தற்காலிகமாக ஏற்பாடு செய்து இருந்தது. இந்தநிலையில் எனது வேலை முடிந்து நான் மாலை வீடு திரும்பிவிட்டேன்’’ என்றார்.


Next Story