நடிகர் விவேக் இறப்புக்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை; இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் கொரோனாவை வெல்ல முடியும்; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்


நடிகர் விவேக் இறப்புக்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை; இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் கொரோனாவை வெல்ல முடியும்; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 24 April 2021 1:04 AM GMT (Updated: 24 April 2021 1:04 AM GMT)

நடிகர் விவேக் இறப்புக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் கொரோனாவை வெல்ல முடியும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கவர்னர் ஆய்வு

புதுவை மாநிலத்தில் கொரோனா பரவலை தடுப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு இடங்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோரிமேடு காவலர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஆக்சிஜன் குழாய்கள் இணைப்பிற்கான வழிமுறைகள் செய்வது உள்பட பல்வேறு விவரங்கள் குறித்து கவர்னர் கேட்டறிந்தார். ஆய்வின்போது கவர்னரின் ஆலோசகர் சந்திரமவுலி, கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது-

ரெம்டெசிவிர் மருந்து

கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான அளவு ஆக்சிஜன், வெண்டிலேட்டர், படுக்கைகள், மருந்துகள், அவசர கால மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

புதிதாக வெண்டிலேட்டர், பல்ஸ் ஆக்சி மீட்டர் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் வேண்டிய அளவுக்கு படுக்கை வசதிகள் தயார்படுத்துமாறு கூறியுள்ளோம். ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு வரக்கூடாது என்பதற்காக புதிதாக 10 ஆயிரம் குப்பிகள் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம்.

கூட்டம் கூடாதீர்

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஜிப்மர் மருத்துவக்கல்லூரி இயக்குநர் உட்பட அனைத்து மருத்துவ கல்லூரி தாளாளர்கள், டீன்களுடன் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தயவு செய்து கூட்டம் கூட வேண்டாம். கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவுங்கள். கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தை சுற்றி 4 இளைஞர்கள் கூட்டமாக நின்று பேசுவதை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்.

தடுப்பூசி போடுவது குறைந்தது

புதுவையில் தற்போது தடுப்பூசியை ஊக்கப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் விவேக் மரணத்திற்கு பிறகு தடுப்பூசி போடுவது குறைந்துவிட்டது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்ட நிலையில் தற்போது அது 1,500 ஆக குறைந்துவிட்டது.

நடிகர் விவேக் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எல்லோரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக நாம் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோமோ, அந்த அளவுக்க நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

நடிகர் விவேக் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை போல் தடுப்பூசி திட்டத்தையும் மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசையை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும். இளைஞர்கள் பங்களிப்பு இருந்தால் நிச்சயமாக நாம் வெற்றி பெற முடியும். அதிகப்படியான நபர்கள் பயமின்றி தடுப்பூசி போடும் சூழ்நிலை வர வேண்டும்.

ஒத்துழைப்பு தர வேண்டும்

புதுவை மக்கள் சட்டங்களை மதிப்பவர்கள். நாம் எச்சரிக்கையாக இருந்தால் போதும். கொரோனாவை கட்டுப்படுத்தலாம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். கொரோனாவால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கவே கடைகள் திறக்கப்படுகிறது. வாழ்வாதாரம் நிச்சயம் முக்கியம். அதைவிட வாழ்வும் முக்கியம். இதனை மக்கள் அனைவரும் உணர்ந்து எல்லோரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு இருந்தது. மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் உடனே மருந்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இதேபோல் மேலும் 3 இடங்களில் கோவிட் கேர் சென்டர் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்யவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க ஆதரவு கரம் நீட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.10-க்கு மதிய உணவு வழங்கும் திட்டம்

புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழலில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதுவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் மூலமாக இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குறைந்த விலையில் (ரூ.10-க்கு) மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.


Next Story