18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடுவதற்கு போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதா? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி


18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடுவதற்கு போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதா? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 24 April 2021 9:06 PM GMT (Updated: 24 April 2021 9:06 PM GMT)

நாடு முழுவதும் வருகிற 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

மத்திய அரசின் இந்த முடிவை முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். அதேநேரம் இந்த முடிவு மத்திய அரசுக்கு மிகப்பெரும் பொறுப்பை கொடுத்திருப்பதாக கூறியுள்ள அவர், நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், தடுப்பூசி கையிருப்பே முதலும், முக்கியமுமான தேவையாகும் என தெரிவித்துள்ளார்.

மே 1-ந் தேதி முதல் அதிக அளவில் மக்கள் தடுப்பூசிக்காக ஆஸ்பத்திரிகளை முற்றுகையிடுவார்கள் எனவும், இதனால் தடுப்பூசியின் தேவை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள ப.சிதம்பரம், இதை சமாளிப்பதற்கு நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரம் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்ற அரசின் வாதம் உண்மையற்றது எனவும், ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி இல்லாமல் மக்கள் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரும் போராட்டங்களுக்கு வழி வகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 


Next Story