தேசிய செய்திகள்

ரூ.100 கோடி மாமூல் விவகாரத்தில் வழக்குப்பதிவை தொடர்ந்து முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை + "||" + The CBI has raided the homes of former minister Anil Deshmukh following a case worth Rs 100 crore

ரூ.100 கோடி மாமூல் விவகாரத்தில் வழக்குப்பதிவை தொடர்ந்து முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

ரூ.100 கோடி மாமூல் விவகாரத்தில் வழக்குப்பதிவை தொடர்ந்து முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
ரூ.100 கோடி மாமூல் புகார் தொடர்பாக மராட்டிய முன்னாள் உள்துறை மந்திாி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையடுத்து நேற்று அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மாதம் ரூ.100 கோடி மாமூல்

இந்திய பணக்காரரான தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதேபோல காரின் உரிமையாளர் ஹிரன் மன்சுக் மார்ச் 5-ந் தேதி தானே கழிமுகப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மும்பை போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மார்ச் 13-ந் தேதி கைது செய்தது. இதையடுத்து வெடிகுண்டு கார் வழக்கு விசாரணையை தவறான பாதைக்கு கொண்டு சென்றதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் பரம்பீர் சிங் கடந்த மாதம் 25-ந் தேதி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார். உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மும்பை போலீசாரை மாதந்தோறும் ஓட்டல், மது பார்களில் இருந்து ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தியதாக முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ராஜினாமா

மேலும் பரம்பீர் சிங் இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதன் காரணமாக சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் மும்பை ஐகோர்ட்டு அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவால் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அனில்தேஷ்முக் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பரம்பீர் சிங்கின் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. அனில்தேஷ்முக், பரம்பீர் சிங், சச்சின் வாசே, துணை போலீஸ் கமிஷனர் ராஜூ புஜ்பால், உதவி கமிஷனர் சஞ்சய் பாட்டீல் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தி இருந்தது. விசாரணையின் போது அனில்தேஷ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் இருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்தது.

இதையடுத்து அனில் தேஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 21-ந் தேதி சி.பி.ஐ. முறைப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய தகவல் தெரியவந்தது.

அதிரடி சோதனை

இந்தநிலையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை, நாக்பூரில் உள்ள முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக்கிற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சி.பி.ஐ. அதிகாரிகள் பி.பி.டி. கிட் அணிந்தபடி சோதனையில் ஈடுபட்டனர்.

மும்பையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அனில்தேஷ்முக் தங்கியிருந்த மலபார்ஹில்லில் உள்ள தியானேஷ்வர் அரசு பங்களா, ஒர்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். சோதனைக்காக அதிகாலையே வந்த அதிகாரிகள் பிரின்டர், மடிக்கணினி போன்றவற்றையும் உடன் எடுத்து வந்து இருந்தனர். சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதேபோல நாக்பூர் ஜி.பி.ஓ. சதுக்கத்தில் உள்ள அனில் தேஷ்முக்கிற்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. முன்னாள் உள்துறை மந்திரிக்கு சொந்தமான வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அனில் தேஷ்முக் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

சோதனை குறித்து அனில் தேஷ்முக் கூறுகையில், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன், என்றார்.

சிவசேனா கருத்து

இந்தநிலையில் சி.பி.ஐ.யின் சோதனை குறித்து அனில்தேஷ்முக் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான சிவசேனாவும் கருத்து கூறியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், “ யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது. அனில்தேஷ்முக் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். சச்சின் வாசே யாருக்காக வெடிகுண்டு காரை நிறுத்தினார் என என்.ஐ.ஏ. இன்னும் கூறவில்லை. அந்த வழக்கில் முன்னாள் கமிஷனர் பரம்பீர் சிங்கின் பங்கு என்ன?. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தான் எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு மற்றும் அனில்தேஷ் மீது அவதூறு ஏற்படுத்த மத்திய அரசின் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. விசாரணையின் மூலம் இதற்கு பின்னால் உள்ள அரசியல் சதி அம்பலப்படுத்தப்படும் ” என்றார்.

இதேபோல சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “ சி.பி.ஐ. நடவடிக்கை குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது. இந்த வழக்கு குறித்து அனில் தேஷ்முக் அவரது கருத்தை தெரிவித்துவிட்டார். சி.பி.ஐ. அவர்களது வேலையை செய்கிறார்கள். மராட்டிய அரசும் தனது வேலையை செய்யும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை
திருவாரூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை.
2. மயிலம் அருகே ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
மயிலம் அருகே ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை.
3. சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது
4. கொரோனா சர்ச்சை பேச்சு பெண் டைரக்டர் மீது வழக்கு
பிரபல மலையாள பெண் டைரக்டர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது, லட்சத்தீவில் இதுவரை கோரொனா தொற்று இல்லாமல் இருந்தது என்றும், தற்போது அங்கு கொரோனாவை மத்திய அரசு பரப்பி உள்ளது என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
5. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை இடையூறு செய்யக்கூடாது: கூட்டுறவு சங்கங்களை கலைப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
கூட்டுறவு சங்கங்களை கலைப்பதை எதிர்த்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தொடர்ந்து பணியாற்ற இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.