கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க வேண்டுகோள்


கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 April 2021 6:53 PM GMT (Updated: 26 April 2021 6:53 PM GMT)

கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க தொழிற்சாலைகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்பம் தொடர்பான இணையவழி கருத்தரங்கை துர்காபூரில் உள்ள மத்திய எந்திர பொறியியல் ஆய்வு நிறுவனம், ராய்ப்பூரில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக்குழு ஆகியவை இணைந்து நடத்தின.

அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவன இணை இயக்குனர் வி.ஆர்.சிர்சாத் பேசும்போது, ‘முன்னெப்போதும் இல்லாத பெரும் தொற்று பரவும் நிலையை நாடு எதிர்கொண்டு வருகிறது. தற்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் கிடைக்காத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. 

இந்தநிலையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுவும், மத்திய எந்திர பொறியியல் ஆய்வு நிறுவனமும் ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உற்பத்தி அலகை உள்நாட்டிலேயே உருவாக்கி இருக்கிறார்கள். இது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்துக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. எனவே தொழிற்சாலைகள் மற்றும் தொழில்முனைவோர் இந்த உபகரணங்களை விரைந்து தயாரிக்க முன்வரவேண்டும்’ என்று கூறினார்.

இந்த உபகரணங்களை நோயாளிகளின் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்க முடியும் என்று மத்திய எந்திர பொறியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் ஹரிஷ் கிராணி கூறினார். மேலும், இதை தயாரிக்க முன்வருபவர்களுக்கு உற்பத்திக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மூலப்பொருட்களின் ஆதார தகவல்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story