கொரோனா 2வது அலை: மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


கொரோனா 2வது அலை: மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள்  அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 27 April 2021 11:34 AM GMT (Updated: 27 April 2021 11:34 AM GMT)

கொரோனா 2வது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாக இல்லை. இதனிடையே ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் கையிருப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆக்சிஜன் பிரச்சினை போன்றவை பற்றி சுப்ரீம் கோர்ட்  தாமாக வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கு சந்திர சூட் தலைமிய்லான பெஞ்ச் முன்  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்சிஜன் உள்ளிட்ட விவகாரங்களை ஐகோர்ட்டுகள் விசாரிப்பதையே விரும்புகிறோம். 

ஐகோர்ட்டுகள் விசாரித்தாலும் நாங்களும் மவுனமாக இருப்பதை விரும்பவில்லை. ஆக்சிஜன் என்பது தேசிய நெருக்கடி . இதனை அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. ஐகோர்ட்டுகளின் அதிகார வரம்புக்கு வராத விவகாரங்களை நாங்கள் விசாரிக்கிறோம்.

தேசிய அளவிலான பிரச்சினைகளை முன்னின்று விசாரிக்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டின் கடமை  என நீதிபதிகள் கூறினர். 
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாளுவதாக தெரிவித்தார். இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், கொரனோ இரண்டாம் நிலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை பற்றி அறிக்கை தர மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story