மராட்டிய மாநிலத்தில் மே 10 வரை சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - மத்திய ரெயில்வே அறிவிப்பு


மராட்டிய மாநிலத்தில் மே 10 வரை சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - மத்திய ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 28 April 2021 1:40 AM GMT (Updated: 28 April 2021 1:40 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் பயணிகள் வரத்து குறைவால் சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

மும்பை,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் தினமும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மராட்டிய மாநில அரசு சார்பில் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாக மும்பையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில ரெயில்களில் பயணிகள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் மராட்டியத்தில் சில மாவட்டங்களில் ரெயில் போக்குவரத்தை நிறுத்த மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இது குறித்து மத்திய ரெயில்வே விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்று அதிகரிப்பால் ரெயில்களில் பயணிகள் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து மும்பை சி.எஸ்.எம்.டியில் இருந்து மான்மாட், லாத்தூர், ஷீரடி ஆகிய இடங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல நாக்பூர், கோலாப்பூர் அமராவதி, ஜல்னா ஆகிய மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று முதல் மே 11-ந்தேதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மும்பை சென்ட்ரலில் இருந்து புறப்படும் டெல்லி, இந்தூர், ஜெய்ப்பூர், ஹாப்பா ஆகிய இடங்களுக்கு செல்லும் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 14 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story