மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடும் முடிவை எடுக்க வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்


மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடும் முடிவை எடுக்க வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 April 2021 1:59 AM GMT (Updated: 29 April 2021 1:59 AM GMT)

நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடும் முடிவை எடுக்க வேண்டும் என கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு,

மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

“மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும். இதற்காக ரூ.35 ஆயிரம் கோடி தான் செலவாகும். மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் போலியோ, சின்னம்மை போன்ற நோய்கள் வந்தபோதும், மத்திய அரசே மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை போட்டுள்ளது. நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடும் முடிவை எடுக்க வேண்டும்.

கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 14 நாட்கள் ஊரடங்கை மாநில அரசு அறிவித்துள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது. தினக்கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், முடிதிருத்தும் தொழில் செய்பவர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 6 மாதங்களுக்கு இந்த ஏழை குடும்பங்களுக்கு தலா ஒருவருக்கு மாதத்திற்கு 10 கிலோ அரிசி வழங்க வேண்டும். அந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். நரேகா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைக்கான கூலியை உயர்த்த வேண்டும். மேலும் கிராமப்புறங்களுக்கு திரும்புபவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயத்துறையின் மேம்பாட்டை உறுதி செய்யும் நோக்கத்தில் உரம் விலையை குறைக்க வேண்டும். இந்தியர்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர்.

அவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போரிட தேவையான உதவிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவிகளை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது.”

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Next Story