இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 April 2021 4:27 AM GMT (Updated: 30 April 2021 4:27 AM GMT)

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 498 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 08 ஆயிரத்து 330 ஆகி இருக்கிறது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 540 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அதே சமயம் நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 15 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரத்து 179 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story