கொரோனா தடுப்பூசி: சமூக, பொருளாதார நிலையில் நலிவுற்றோருக்கு முன்னுரிமை உத்தரவு; பிரதமருக்கு கோரிக்கை


கொரோனா தடுப்பூசி:  சமூக, பொருளாதார நிலையில் நலிவுற்றோருக்கு முன்னுரிமை உத்தரவு; பிரதமருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 30 April 2021 5:26 AM GMT (Updated: 30 April 2021 5:26 AM GMT)

சமூக, பொருளாதார நலிவுற்ற நபர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க உத்தரவிட கோரி பிரதமருக்கு சத்தீஷ்கார் முதல் மந்திரி கடிதம் எழுதியுள்ளார்.

ராய்ப்பூர்,

நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன.  கடந்த 24 மணிநேரத்தில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்து உள்ளது.  தொடர்ந்து 9வது நாளாக 3 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை நாடு சந்தித்து வருகிறது.

கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  முதலில், முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதன்பின்னர் கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  இதில், 100 வயது கடந்த முதியவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் வருகிற மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அறிவித்தது.

இதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகளை போட்டு கொள்ள முடியும்.  எனினும், நாட்டில் தடுப்பூசிகள் பற்றாக்குறை என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனை கவனத்தில் கொண்டு பிரதமர் மோடிக்கு சத்தீஷ்கார் முதல் மந்திரி பூபேஷ் பாகல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், கொரோனா தடுப்பூசி போடுவதில் 18-44 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இதேபோன்று, சமூக மற்றும் பொருளாதார நிலையில் நலிவுற்ற நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் இடத்திலேயே பதிவு செய்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தி தரவேண்டும்.  ஆன்லைன் வழியே மட்டுமே பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தினால், ஒருவரும் ஏமாற்றம் அடையாமல் இருக்க இந்த வசதி உதவும் என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார்.


Next Story