ஆக்சிஜன், படுக்கை, டாக்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
ஆக்சிஜன், படுக்கை மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக சமூக வலைதளங்களில் உதவி கேட்டு பதிவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் வினியோகம், சேவைகள் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, எழுத்தறிவற்ற, இணையதள வசதி இல்லாத தொலைதூர பகுதி மக்கள் கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் எவ்வாறு பதிவு செய்வார்கள்? கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மத்திய அரசின் பங்கு என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர், கொரோனா தடுப்பூசியின் விலையை மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தைப் பயன்படுத்தி அரசு முறைப்படுத்த வேண்டும் என்றனர்.
மேலும், கொரோனா தடுப்பூசிகளை ஏன் மத்திய அரசு மொத்தமாக வாங்கி மாநிலங்களுக்கு வினியோகிக்கக் கூடாது? என கேட்டதுடன், விடுதிகள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றவும் யோசனை தெரிவித்தனர். மக்கள் அனைவருக்கும் விலையில்லா தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு திட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளை சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் உள்ள தேசிய கொள்கை திட்டம் என்ன என நீதிபதிகள் கேட்டதுடன், புதிய வகை கொரோனாவை ஆர்டி-பிசிஆர் சோதனையில் கண்டறிய முடியாது என்பது தொடர்பாக இதுவரை என்ன ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது? கொரோனா பரிசோதனை வசதிகளை அதிகரிப்பதற்கும், பரிசோதனை நேரத்தை குறைப்பதற்கும் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
அத்துடன், ஆக்சிஜன், படுக்கை மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக உதவிகேட்டு சமூக வலைதளங்களில் பதிவிடுவோருக்கு எதிராக புரளி கிளப்புவதாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மத்திய, மாநில அரசுகள், அனைத்து மாநில டி.ஜி.பி.களுக்கு இவ்வாறு உத்தரவிடுகிறோம். இந்த உத்தரவை மீறுவோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, டெல்லிக்கு தேவையான 200 டன் ஆக்சிஜனை வினியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆஸ்பத்திரிகளில் நிகழும் அனைத்து மரணங்களுக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டும் காரணம் அல்ல என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், நாட்டின் முகமாக தலைநகர் டெல்லி இருக்கும்போது, அதற்கு தேவையான ஆக்சிஜன் வினியோகத்தை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை என்று தெரிவித்தனர்.
அப்போது டெல்லி அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் ராகுல் மெஹ்ரா, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகள் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் சுமிதா டாவ்ரா, நாட்டில் தற்போது மருத்துவ ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்றார்.
அதைத் தொடர்ந்து, கொரோனா தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்டுகள், முன்யோசனையின்றி விமர்சிப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், பீகார் அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமாரும் நீதிபதிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர்.
அதற்கு நீதிபதிகள், அது போன்ற விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என தெரிவித்து, வழக்கு விசாரணையை மே 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story