இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது - உலகளவில் தினசரி கொரோனா தாக்குதலில் புதிய உச்சம்


இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது - உலகளவில் தினசரி கொரோனா தாக்குதலில் புதிய உச்சம்
x
தினத்தந்தி 1 May 2021 8:30 PM GMT (Updated: 1 May 2021 8:30 PM GMT)

உலகளவில் தினசரி கொரோனா தாக்குதலில் புதிய உச்சம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று தாக்குதல் உறுதியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது.

கடந்த 22-ந்தேதி தொடங்கி 9 நாட்கள் தொடர்ந்து தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று, இந்தியாவில் தாக்கி வந்தது.

நேற்று இந்த எண்ணிக்கை முதன் முதலாக 4 லட்சத்தை கடந்து விட்டது. 4 லட்சத்து 1,993 பேருக்கு கொரோனா தாக்குதல் நேற்று உறுதியானது.

இவர்களையும் சேர்த்து நாட்டில் இதுவரை 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 பேரை கொரோனா தனது ஆக்டோபஸ் கரங்களால் தாக்கி இருக்கிறது.

நேற்றும் கொரோனாவின் மோசமான பிடியில் 10 மாநிலங்கள் சிக்கி உள்ளன. அந்த மாநிலங்கள் மராட்டியம், டெல்லி, கர்நாடகம், கேரளா, உத்தரபிரதேசம், தமிழகம், மேற்கு வங்காளம், ஆந்திரா, ராஜஸ்தான், பீகார் ஆகும். நேற்றைய தினசரி பாதிப்பில் இந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் 73.71 சதவீதத்தினர் ஆவார்கள். மராட்டியத்தில் அதிகபட்சம் 62 ஆயிரத்து 919பேர் பாதிப்புக்குள்ளானார்கள். கர்நாடகத்தில் 48 ஆயிரத்து 296 பேரும், கேரளாவில் 37 ஆயிரத்து 199 பேரும் கொரோனா கரங்களில் நேற்று சிக்கினார்கள்.

கொரோனாவுக்கு கடந்த சில நாட்களாக தினசரி பலி 3 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் பலி 3,498 ஆக பதிவானது. நேற்றே சற்றே அதிகரித்து 3,523 பேர் இறந்திருக்கிறார்கள். இதன்மூலம் நாட்டில் கொரோனா தாக்குதலில் இருந்து மீள ஒரு வழியின்றி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 853 ஆக உயர்ந்தது.

நேற்றும் எப்போதும்போல மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 828 பேர் இறந்துள்ளனர். டெல்லியில் 375 பேரும், உத்தரபிரதேசத்தில் 332 பேரும், சத்தீஷ்காரில் 269 பேரும், கர்நாடகத்தில் 217 பேரும், குஜராத்தில் 173 பேரும் ராஜஸ்தானில் 155 பேரும், உத்தரகாண்டில் 122 பேரும், ஜார்கண்டில் 120 பேரும், பஞ்சாப்பில் 113 பேரும் மாண்டிருக்கிறார்கள்.

இருந்தபோதும் நேற்று அந்தமான் நிகோபாரும், அருணாசலபிரதேசமும், தத்ராநகர் ஹவேலி டாமன் தியுவும், லட்சத்தீவுகளும் கொரோனா உயிரிழப்பில் இருந்து தப்பி உள்ளன.

நாட்டின் கொரோனா இறப்புவிகிதம் தொடர்ந்து 1.11 சதவீதமாக நீடிக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விட்டு விடுதலையாகி பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். இப்படி சரியாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் வீடு திரும்பி இருப்பது மீட்பில் புதிய சாதனைஆகும்.

இதுவரை நாட்டில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 68 ஆயிரத்து 813 பேர் மீட்கப்பட்டிருப்பது கவனத்தை கவர்கிறது.

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் என்பது 81.84 சதவீதம் ஆகும்.

நேற்று புதிதாக நாடெங்கும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் புதிதாக 98 ஆயிரத்து 482பேர் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சையில் இருப்போர் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 68 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது.

இது மொத்த பாதிப்பில் 17.06 சதவீதம் என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தந்துள்ளது.

மராட்டியம், கர்நாடகம், உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, சத்தீஷ்கார், தமிழகம், மேற்கு வங்காளம், பீகார் ஆகிய 11 மாநிலங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெறுவோரில் முக்கிய பங்கு (78.22 சதவீதம்) வகிக்கிறார்கள்.

கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 299 மாதிரிகள் சோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் தருகிறது.

Next Story