மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சியை தக்க வைக்குமா? கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? இன்று முடிவு வெளியாகிறது


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சியை தக்க வைக்குமா? கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? இன்று முடிவு வெளியாகிறது
x
தினத்தந்தி 1 May 2021 8:57 PM GMT (Updated: 1 May 2021 8:57 PM GMT)

கேரள சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் 140 உறுப்பினர் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜனதா இடையே பலத்த போட்டி நிலவியது.

இந்த கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 957 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது 11 மந்திரிசபை சகாக்கள், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, பா.ஜனதாவின் மெட்ரோமேன் ஸ்ரீதரன், மத்திய மந்திரி அல்போன்ஸ், மாநில தலைவர் சுரேந்திரன் என பல்வேறு தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை 2.03 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் நிர்ணயித்தனர்.

இந்த வாக்குகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகின்றன. பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த மையங்களில் 3,332 துணை ராணுவத்தினர் உள்பட 30 ஆயிரத்து 281 போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலிக்குட்டி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதால், காலியான மலப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. அந்த தொகுதியின் முடிவும் இன்று வெளியாகிறது.

மாநிலத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக இடதுசாரிகளும், காங்கிரசும் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. ஆனால் இந்த வரலாறு இந்த முறை மாறும் எனவும், இடதுசாரி முன்னணி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் எனவும் பெரும்பாலான தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

இது தங்களின் நல்லாட்சிக்கு கிடைத்த சான்று என பெருமிதம் அடைந்துள்ள இடதுசாரிகள், வெற்றிச்செய்திக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை நிராகரித்துள்ள காங்கிரஸ் முகாம், தங்களின் வெற்றி இன்று உறுதி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு கட்சியும் இவ்வாறு நம்பிக்கொண்டிருக்க, மக்கள் யார் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர் என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும்.

Next Story