அனல் பறந்த தேர்தல் களம்: மேற்கு வங்காளத்தில் ஆட்சியை தக்க வைப்பாரா, மம்தா பானர்ஜி? 108 மையங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை


அனல் பறந்த தேர்தல் களம்: மேற்கு வங்காளத்தில் ஆட்சியை தக்க வைப்பாரா, மம்தா பானர்ஜி? 108 மையங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 2 May 2021 4:30 AM IST (Updated: 2 May 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞயாற்றுக்கிழமை) எண்ணப்படுகின்றன. அங்கு மம்தா பானர்ஜி, ஆட்சியை தக்கவைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.

கொல்கத்தா, 

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதனால் 2 மாதங்களுக்கு மேலாக மாநில தேர்தல் களம் மிகவும் கொதிநிலையில் இருந்தது.

சுட்டெரிக்கும் வெயிலை விட அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் அனல் பறந்தது. இதனால் அரசியல் மோதல்கள், வன்முறைகள், தாக்குதல்கள் என பதற்றத்துக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டன.

தமிழகம், கேரளா, அசாம் போன்ற மாநிலங்களுடன் இணைந்து இந்த தேர்தல் நடத்தப்பட்டாலும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, இடதுசாரி-காங்கிரஸ் போன்ற கட்சிகளின் விடாப்பிடியான போட்டியால் மேற்கு வங்காள தேர்தல் மட்டும் நாடு முழுவதும் தனிக்கவனத்தை ஈர்த்திருந்தது.

இப்படி 2 மாதங்களுக்கு மேலாக மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.

அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதற்காக 27 மாவட்டங்களில் 108 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக தெற்கு 24 பர்கானாக்களில் 15 மையங்களும், குறைந்தபட்சமாக கலியம்போங், அலிபுர்துவார், ஜார்கிராம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மையமும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக 256 கம்பெனி துணை ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. அவர்களுடன் மாநில போலீசாரும் இணைந்து சட்டம் ஒழுங்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கொரோனா 2-வது அலை காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கொரோனா பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்காக முக கவசம், முக பாதுகாப்பு கவசம், சானிடைசர் போன்றவை மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

வாக்கு எண்ணும் பணிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 15 முறையாவது முழு மையத்தையும் சானிடைசர் மூலம் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக மையங்களில் வழக்கமான 14 மேஜைகளுக்கு பதிலாக வெறும் 7 மேஜைகள் மட்டுமே போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இடம் அதிகமாக இருக்கும் மையங்களில் கூடுதல் மேஜைகள் போட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வாக்கு எண்ணும் மையங்களில் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றவும், வெளியே மக்கள் கூடாமல் இருக்கவும் வழிமுறைகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க 292 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மேற்கு வங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன. அவற்றின் உண்மைத்தன்மை இன்று பிற்பகலுக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story