கொரோனா: மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால் காரிலேயே உயிரிழந்த பெண்


கொரோனா: மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால் காரிலேயே உயிரிழந்த பெண்
x
தினத்தந்தி 2 May 2021 4:52 AM IST (Updated: 2 May 2021 4:52 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால் 35 வயது நிரம்பிய பெண் காரிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவின் கோர 2-வது அலைக்கு பாதிப்பு அதிகமடைந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

மக்கள் சொந்தமாக ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு வர வேண்டும் என சில மருத்துவமனைகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் தனது காரிலேயே உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்ரிதி குப்தா. 35 வயதான இப்பெண் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எஞ்சினியராக பணியாற்றி வந்தார். அவரது கணவர் மற்றும் 2 குழந்தைகள் சொந்த மாநிலமான மத்தியபிரதேசத்தில் வசதித்து வருகின்றன.

இதற்கிடையில், பெண்மணி ஜக்ரிதி குப்தாவுக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜக்ரிதி குப்தாவை உடன் பணிபுரியும் நண்பர் நொய்டாவில் உள்ள ஜிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு காரில் அழைத்து வந்துள்ளார். ஆனால், மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி இருந்ததால் ஜக்ரிதி குப்தா காரிலேயே காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனாலும், ஜக்ரிதி குப்தாவுடன் வந்த நண்பர் மருத்துவமனையில் படுக்கை வசதி ஏற்பாடு செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டார். கொரோனா பாதிக்கப்பட்ட ஜக்ரிதி குப்தா சுமார் 3 மணி நேரம் காரிலேயே காத்து இருந்துள்ளார்.

ஆனால், சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர்  கொரோனாவின் கொடிய பாதிப்பால் ஜக்ரிதி குப்தா காரிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் அப்பெண்ணை பரிசோதனை செய்தனர். அதில் ஜக்ரிதி குப்தா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த சச்சின் என்பவர் கூறுகையில், ஜக்ரிதி குப்தாவின் நண்பர் உதவி கேட்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தபோது நான் அருகில் தான் நின்றுகொண்டிருந்தேன். ஆனால், அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.  3.30 மணியளவில் அந்த பெண் மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்து அந்த பெண் மூச்சு விடாத நிலையில் கிடந்தது தொடர்பாக மருத்துவமனை வரவேற்பு அறையில் உள்ள நபரிடம் தகவல் தெரிவிக்கார். அங்கு பணியில் இருந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக ஓடி வந்து அந்த பெண்ணை பரிசோதனை செய்தனர். ஆனால், அப்பெண் (ஜக்ரிதி குப்தா) உயிரிழந்துவிட்டதாக மருத்துவ ஊழியர்கள் அறிவித்தனர்.  

கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு படுக்கை வசதி இல்லாததால் சுமார் 3 மணி நேரம் காரில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story