மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு ரூ.8,873 கோடி - மத்திய அரசு வழங்கியது
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முதல் தவணையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கு ரூ.8,873.6 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் 2-வது அலையால் மாநிலங்கள் அனைத்தும் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பெருகி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமலும், அவர்களுக்கான படுக்கைகள், தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் போன்றவற்றை ஏற்பாடு செய்ய முடியாமலும் கையை பிசைந்து நிற்கின்றன.
இது ஒருபுறம் இருக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநிலங்களிடம் போதிய நிதி வசதியும் இல்லை. இதனால் கொரோனா சிக்கலில் இருந்து மீள வழி தெரியாமல் விழி பிதுங்கி உள்ளன.
எனவே கொரோனா தடுப்பு பணிகளுக்கு மாநிலங்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு நிதியுதவி வழங்கி இருக்கிறது. இதற்காக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 2021-22-ம் ஆண்டுக்கான மாநில பேரிடர் நிவாரண நிதியை முன்கூட்டியே வழங்கி இருக்கிறது.
அதன்படி நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் செலவினத்துறை ரூ.8,873.6 கோடியை மாநிலங்களுக்கு விடுவித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நிதி கமிஷனின் பரிந்துரைப்படி வழக்கமாக இந்த நிதி ஜூன் மாதத்தில்தான் மாநிலங்களுக்கு வழங்கப்படும். ஆனால் கொரோனா தொற்றை வேரறுப்பதற்காக இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்கப்பட்டு இருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த நிதியை முன்கூட்டியே விடுவித்தது மட்டுமின்றி, கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையின் பயன்பாட்டு சான்றிதழுக்காக காத்திருக்காமலும் இந்த தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த தொகையின் பாதியளவுக்கு அதாவது ரூ.4,436.8 வரை கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்கள் பயன்படுத்த முடியும்.
அந்தவகையில் ஆஸ்பத்திரிகளிலேயே ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், வெண்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், கொரோனா மருத்துவ மையங்கள், தெர்மல் ஸ்கேனர்கள், கவச உடைகள், பரிசோதனை வசதிகள் போன்றவற்றை இந்த நிதியில் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என உள்துறை அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story