தேசிய செய்திகள்

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வந்தால் 5 ஆண்டு சிறை - நாளை முதல் அமல் + "||" + 5 years imprisonment if Australians return from India - effective from tomorrow

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வந்தால் 5 ஆண்டு சிறை - நாளை முதல் அமல்

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வந்தால் 5 ஆண்டு சிறை - நாளை முதல் அமல்
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வந்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை (திங்கட்கிழமை) அமலுக்கு வருகிறது.
மெல்போர்ன்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று போடும் ஆட்டம் உலக நாடுகளையெல்லாம் கதி கலங்க வைத்து வருகிறது. இந்தியாவில் வருந்து வருவோருக்கு உலக நாடுகள் பயண தடைகளை பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவில் இருந்து வருவோருக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு வரும் நாளில் இருந்து 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும்.

இந்தியாவில் இருந்து இந்த தடையை மீறி ஆஸ்திரேலியர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு வந்தால் அது குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் ரூ.37.62 லட்சம்) அபராதம் விதிக்கப்படும்.

ஆஸ்திரேலிய மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு முடிவு அங்கு எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்தியாவில் ஏறத்தாழ 9 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் உள்ளனர். அவர்களில் 600 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு பல தரப்பினரின் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவுக்கு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா உதவிக்கரமும் நீட்டி உள்ளது.

1,000 வென்டிலேட்டர்களையும், 10 லட்சம் முககவசங்களையும், 1 லட்சம் பாதுகாப்பு உடைகளையும், 1 லட்சம் ஜோடி கையுறைகளையும், 20 ஆயிரம் முக ஷீல்டுகளையும் வழங்க முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.