அசாமில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்தது; சர்வானந்தா சோனாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்


அசாமில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்தது; சர்வானந்தா சோனாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்
x
தினத்தந்தி 2 May 2021 7:16 PM GMT (Updated: 2 May 2021 7:16 PM GMT)

அசாம் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்தது. சர்வானந்தா சோனாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.

அசாம் சட்டசபை தேர்தல்

126 இடங்களைக் கொண்டுள்ள அசாம் சட்டசபைக்கு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக பா.ஜ.க. கூட்டணியும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கூட்டணியும் கடும் போட்டியில் இறங்கின. அசாம் ஜாதிய பரிஷத்தும், ரைஜோர் தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 946 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 81.07 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஆட்சியைத்தக்க வைத்தது பா.ஜ.க.

நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி, கொரோனா கால நெறிமுறைகளைப்பின்பற்றி தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் இந்த மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தன.

இதன்படியே வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்து பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளர்கள்தான் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தனர். மொத்தம் உள்ள 126 இடங்களில் 64 இடங்களில் வெற்றி பெற்றாலே பெரும்பான்மை பலம் பெற்று விடலாம் என்ற நிலையில் காலை 11 மணி வாக்கில் இந்த எண்ணிக்கைக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலைக்கு வந்தது.

கடைசியாக கிடைத்த தகவல்கள் பா.ஜ.க. கூட்டணி 76 இடங்களில் வென்று பா.ஜ,க. கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளதாக தெரிவித்தன. இதன்மூலம் தொடர்ந்து 2-வது முறையாக சர்வானந்தா சோனாவால் முதல்-மந்திரி பதவி ஏற்க உள்ளார். இங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 45 இடங்கள் கிடைத்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களில் முன்னிலை பெற்றனர்.

சாதனை வெற்றி

இந்த மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை. அந்த வகையில் இது பா.ஜ.க.வுக்கு சாதனை வெற்றி ஆகிறது.

முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால், மஜூலி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார். பா.ஜ.க. தலைவர்கள் பலரும் வெற்றி முகத்தில் இருந்தனர். ஆனால் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, கோஹ்பூர் தொகுதியில் பின்தங்கினார்.

சர்வானந்தா சோனாவாலுக்கு பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அசாமில் வெற்றி பெற்றது குறித்து முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் எங்களை ஆசீர்வதித்துள்ளனர்” என குறிப்பிட்டார்.

 


Next Story