நைட்ரஜன் ஆலைகளை ஆக்சிஜன் உற்பத்தி கூடமாக மாற்றுவது பற்றி பிரதமர் மோடி ஆலோசனை


நைட்ரஜன் ஆலைகளை ஆக்சிஜன் உற்பத்தி கூடமாக மாற்றுவது பற்றி பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 3 May 2021 1:40 AM IST (Updated: 3 May 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

நைட்ரஜன் ஆலைகளை ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளாக மாற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

ஆக்சிஜன் தேவை

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போல தாக்கி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வரத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து காலி டேங்கர்கள் வரவழைக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளில் இருந்து ஆக்சிஜன் நிரப்பி ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அடுத்தகட்டமாக, இந்தியாவில் உள்ள சில நைட்ரஜன் உற்பத்தி ஆலைகளை சற்று மாறுதல்கள் செய்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொழில்துறையினருடன் கலந்து பேசி, இதுவரை 14 நைட்ரஜன் ஆலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை ஆக்சிஜன் ஆலைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. அத்துடன், மேலும் 37 நைட்ரஜன் ஆலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மோடி ஆலோசனை

இந்தநிலையில், ஆக்சிஜன் ஆலைகளாக மாற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், பிரதமரின் முதன்மை செயலாளர், மந்திரிசபை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், மத்திய சாலை போக்குவரத்து செயலாளர் மற்றம் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நைட்ரஜன் ஆலைகளை அடையாளம் கண்டு, அவற்றை ஆக்சிஜன் ஆலைகளாக மாற்றுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

நைட்ரஜன் ஆலைகளை பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றுவது குறித்தும், அப்படி இல்லாவிட்டால், அதே இடத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்து, வாகனங்கள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Next Story