‘கோவிஷீல்டு’ தடுப்பூசி உற்பத்தி முழுவீச்சில் நடைபெறுகிறது; சீரம் நிறுவன தலைமை அதிகாரி ஆதார் பூனாவாலா தகவல்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரம் பெற்றுள்ள நிலையில், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சில மாநிலங்களில் அப்பணி பெயரளவுக்குத்தான் நடைபெற்றது.இந்நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக தான் சந்திக்கும் நெருக்கடி பற்றி, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா பேசியிருந்தார்.கோவிஷீல்டு தடுப்பூசி வினியோகம் கோரி சில சக்திவாய்ந்த நபர்களிடம் இருந்து தனக்கு வரும் நிர்ப்பந்தம் குறித்தும் அவர் ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தார். மத்திய அரசு சார்பில் அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், தனது
குடும்பத்தினருடன் இங்கிலாந்தின் லண்டனுக்கு ஆதார் பூனாவாலா சென்றார். பல்வேறு தரப்பில் இருந்து வந்த நெருக்கடிதான் அவர் லண்டன் சென்றதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆதார் பூனாவாலா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இங்கிலாந்தில் எங்களின் அனைத்து கூட்டாளிகள், பங்குதாரர்களுடன் சிறப்பான சந்திப்பை நிகழ்த்தினேன். அதேநேரம், புனேயில் கோவிஷீல்டு தயாரிப்பு முழுவீச்சில் நடப்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சில நாட்களில் இந்தியா திரும்பியபிறகு, தடுப்பூசி உற்பத்தி செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஆவலாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story