மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்; மேற்கு வங்க தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்


மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்; மேற்கு வங்க தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 May 2021 6:27 AM IST (Updated: 3 May 2021 6:27 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தோல்விக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பொறுப்பேற்க வேண்டும்

மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று பா.ஜனதா அடம்பிடித்து தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்து தேர்தலை நடத்தியது. ஆனால் அந்த மாநிலத்தில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. அந்த தோல்விக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் கொரோனா பரவலுக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். தான் பிரதமர் என்பதை மறந்து மேற்கு வங்காளத்தில் மோடி தீவிரமாக பிரசாரம் செய்தார். அங்கு மம்தா பானர்ஜி தனியாக போராடி மோடிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மம்தா பானர்ஜிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதசார்பற்ற வாக்குகள்

அசாமில் மட்டும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரியில் அக்கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது உண்மை தான். அந்த மாநில மக்கள், மதசார்பற்ற வாக்குகள் சிதறினால் பா.ஜனதா வெற்றி பெற்றுவிடும் என்று கருதி மம்தா பானர்ஜி கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஆட்சி அதிகாரம், பணத்தால் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதிய பா.ஜனதாவுக்கு இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு, தக்க பாடம் கற்பித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மந்திரிகளாக இருந்த ஊழல்வாதிகளை பா.ஜனதாவில் சேர்த்துக் கொண்டு அவர்களை வைத்தே அக்கட்சி தேர்தலை சந்தித்தது.

மதவாத சக்திகள்

பா.ஜனதாவினர் கொள்கை குறித்து பேசுகிறார்கள். ஆனால் மாற்றுக்கட்சியினரை சேர்த்துக் கொள்ளும்போது எந்த கொள்கையையும் பார்ப்பது இல்லை. தென்இந்திய மாநிலங்கள் மதவாத சக்திகளை எப்போதும் ஆதரிப்பது இல்லை. கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு இல்லை. கர்நாடகத்திலும் ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி குறுக்கு வழியில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் எனறு நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் கொரோனா நெருக்கடி காலத்தில் அங்குள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் சிறப்பான முறையில் பணியாற்றினார். அதனால் மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர்.

மாற்றத்தை விரும்புகிறார்கள்

இந்த 5 மாநில தேர்தல் உள்பட சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் முடிவுகள், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெலகாவி மக்களவை தேர்தலில் எங்கள் கட்சி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் அந்த வாக்கு வித்தியாசம் 5 ஆயிரமாக குறைந்துள்ளது. நாடு சோதனையான காலக்கட்டத்தில் இருப்பதால் நாம் வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் உள்ளோம். அதனால் யாரும் வெற்றி கொண்டாட்டங்களை

நடத்தக்கூடாது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story