கர்நாடகத்தில் தாலுகா அளவில் கொரோனா சிகிச்சை மையங்கள்; போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


கர்நாடகத்தில் தாலுகா அளவில் கொரோனா சிகிச்சை மையங்கள்; போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 3 May 2021 6:31 AM IST (Updated: 3 May 2021 6:31 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தாலுகா அளவில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

மந்திரி ஆலோசனை

கர்நாடக மாநில உள்துறை மந்திரியும், உடுப்பி மாவட்ட பொறுப்பு மந்திரியுமான பசவராஜ் பொம்மை நேற்று உடுப்பியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உடுப்பியில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர் ஜெகதீஷ், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாாி நவீன் பட், போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்ததும் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா சிகிச்சை மையங்கள்

உடுப்பி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. தற்போது உடுப்பியில் 2,596 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 4 நாட்களில் உடுப்பி உள்பட மாநிலம் முழுவதும் தாலுகா அளவில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

இந்த கொரோனா சிகிச்சை மையங்களில் கொேரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக அந்த கொரோனா சிகிச்சை மையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் உடுப்பி மணிப்பால் மருத்துவமனையில் கூடுதலாக அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில், கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் லேசான தொற்று அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற வேண்டும். அவ்வாறு வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுபவர்களை, அந்த பகுதி சுகாதாரத்துறை அதிகாரிகள் நாள்தோறும் 2 முறை அவர்களது வீடுகளுக்கு சென்று தேவையான சிகிச்சை, மருந்து, மாத்திரைகளை வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story