தமிழகத்தில் 10 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்த தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது; கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கருத்து
தமிழகத்தில் 10 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்த தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது என்று குமாரசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
கட்சிகளை ஒழிக்க முடியாதுபசவகல்யாண் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் பக்கம் நான் இருப்பேன். தவறான பிரசாரம், பண பலத்தால் எங்களது வெற்றி பறிபோய் உள்ளது. தேசிய கட்சிகளுக்கு எதிராக போட்டி போட முடியும் என்பதை எங்கள் கட்சி தொண்டர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். கர்நாடக இடைத்தேர்தல் முடிவுடன் 5 மாநில தேர்தல் முடிவும் வெளிவந்துள்ளது. தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை ஒழிக்க முடியாது என்பது இந்த முடிவு மூலம் தெரியவந்துள்ளது. கர்நாடகத்தில் 2 தேசிய கட்சிகளுக்கு எதிராக ஜனதா தளம் (எஸ்) பலம் அடையும்.
திடமான போராடும் குணம்மேற்கு வங்காளத்தில் ஆட்சி அதிகாரம், பணம், நெருக்கடி போன்ற பல்வேறு நெருக்கடிகளை எதிர்த்து போராடி மம்தா பானர்ஜி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளார். அவரது திடமான போராடும் குணம் எங்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது. தமிழகத்தில் 10 ஆண்டு காலம் அரசியல் வனவாசம் அனுபவித்த தி.மு.க., தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. கடினமான நேரத்திலும் பொறுமையை இழக்காமல் கட்சியை நடத்தி மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடியுள்ளார். அவரின் பொறுமை நமக்கு ஒரு பாடமாகும்.
வெற்றி மாலைகளாக...மாநில கட்சிகளை மக்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். இந்த 5 மாநில தேர்தல் நமக்கு பாடமாகும். கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) தனது சக்தியை மீண்டும் வெளிப்படுத்தும். தோல்விகளை வெற்றி மாலைகளாக மாற்றும் காலம் நம்மிடம் உள்ளது.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.