பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை மேற்குவங்காளம் பயணம்
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 2 நாள் பயணமாக நாளை மேற்குவங்காளம் செல்கிறார்.
கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிஎம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.
ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரி பதவியேற்க உள்ளார். மம்தா பானர்ஜியின் பதவியேற்பு விழா மே 5-ம் தேதி (நாளை மறுதினம்) எந்தவித ஆடம்பரமின்றி சுலபமான முறையில் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசார் தேர்தலில் தோல்வியடைந்த பாஜகவினர் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று பாஜக அலுவலகங்கள், பாஜக ஆதரவாளர்களின் வீடுகளை குறிவைத்து திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த தாக்குதல் தொடர்பாக சமூகவலைதளங்களில் பல்வேறு வீடியோக்களும் வெளியாகின.
மேலும், தேர்தல் வெற்றிக்கு பின்னர் திரிணாமுல் காங்கிரசால் நடத்திய கொடூர தாக்குதலில் நேற்று மட்டும் தங்கள் கட்சி தொண்டர்கள் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
நூற்றுக்கணக்கான பாஜக அலுவலகங்களும், பாஜக தொண்டர்களின் வீடுகளும் திரிணாமுல் காங்கிரசாரால் சூரையாடப்பட்டதாகவும், பாஜக தொண்டர்கள் பலர் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜக கட்சியினர் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 2 நாள் பயணமாக நாளை (மே 4) மேற்குவங்காளம் செல்கிறார். இந்த பயணத்தின்போது, திரிணாமுல் காங்கிரசாரால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பாஜக தொண்டர்களையும் ஜேபி நட்டா சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முதல்முறையாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மேற்குவங்காளம் செல்வது அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
Related Tags :
Next Story