மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராமில் மீண்டும் வாக்குகளை எண்ண முடியாது; தேர்தல் ஆணையம் அறிவிப்பு


மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராமில் மீண்டும் வாக்குகளை எண்ண முடியாது; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 11:43 PM IST (Updated: 3 May 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மம்தா பானர்ஜி தோல்வி

மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். இவர், மம்தாவை காட்டிலும் 1,736 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘மாநிலத்தில் நான்கில் மூன்று என்ற வீதத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அப்படியிருக்கும் போது நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்கிறார் என்றால், அங்கு முறைகேடு நடந்துள்ளது என்பது தெரியவருகிறது’ என்றார்.

கோர்ட்டுக்கு செல்கிறார்

இதனிடையே நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் தனது கோரிக்கையை ஏற்று அங்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இது  தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரியோ, வாக்கு எண்ணிக்கை மிக சரியாக நடைபெற்றது என்றும், நந்திகிராமில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்துவிட்டது.

அதனால், மம்தா பானர்ஜி கோர்ட்டுக்கு செல்லும் முடிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story