சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில், 24 மணி நேரத்தில் 24 கொரோனா நோயாளிகள் பலி ஆக்சிஜன் கிடைக்காததால் இறந்ததாக புகார்


சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில், 24 மணி நேரத்தில்  24 கொரோனா நோயாளிகள் பலி ஆக்சிஜன் கிடைக்காததால் இறந்ததாக புகார்
x
தினத்தந்தி 3 May 2021 8:38 PM GMT (Updated: 3 May 2021 8:38 PM GMT)

சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில், 24 மணி நேரத்தில் 24 கொரோனா நோயாளிகள் பலியாகி உள்ளனர். இந்த நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காததால் இறந்ததாக புகார் எழுந்துள்ளது.

பெங்களூரு:
சீனாவில் உகான் நகரில் தோன்றிய கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் உலக நாடுகளை படாதபாடு படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா தனது கோரப்பிடியை இறுக்கி உள்ளது. 
கொரோனா முதல் அலையில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து இருந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் இருந்து சற்று குறைந்து இருந்த கொரோனா தற்போது மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. 
கொரோனா 2-வது அலை
இந்த முறை கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. இந்த அலையில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகிறார்கள். 
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு செயற்கை சுவாச கருவி (வென்டிலேட்டர்) பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆக்சிஜன் சிலிண்டர்கள்  
மேலும் புதிய பிரச்சினையாக செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 
இதன்காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் இறந்து வருகின்றனர். சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற உறவினர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்களை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 
24 பேர் சாவு 
இந்த நிலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து இருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் சுவடு இன்னும் மறையாத நிலையில், கர்நாடகத்தில் மேலும் ஒரு கோர சம்பவம் அரங்கேறி உள்ளது. 
அதாவது கர்நாடக மாநிலத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.  அதுபற்றிய விவரம் வருமாறு:-
சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரி
சாம்ராஜ்நகர் டவுனில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் சுமார் 10 பேர் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு தினசரி உயிரிழப்பு என்பது 4, 5 என்ற அளவில் தான் இருந்து வந்தது.  
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மட்டும் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 18 கொரோனா நோயாளிகள் திடீரென இறந்தனர். நள்ளிரவுக்கு பிறகு அதிகாலை வரை மேலும் 6 நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக மொத்தம் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 24 கொரோனா நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர். 
குடும்பத்தினர் புகார்
ஆக்சிஜன் கிடைக்காததால் தான் நோயாளிகள் இறந்ததாக அவர்களின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் 24 பேர் இறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
மாநில அரசு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று கூறி வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் இறந்துள்ளனர். இந்த விவகாரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மாநில அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சாம்ராஜ்நகருக்கு விரைந்தனர்
இந்த சம்பவத்திற்கு மாநில அரசே பொறுப்பு என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த சம்பவம் நடந்தது குறித்து தகவல் வெளியானவுடன் முதல்-மந்திரி எடியூரப்பாவின் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி சுரேஷ்குமார் ஆகியோர் சாம்ராஜ்நகருக்கு விரைந்தனர். 
அங்கு அரசு மாவட்ட ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். 
இந்த ஆலோசனைக்கு பிறகு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த மந்திரிகள் சுதாகர், சுரேஷ்குமார் ஆகியோர் கூறியதாவது:-
ஆக்சிஜன் வினியோகம்
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படும் புகார் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை வந்ததும் உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 
இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ரவி கூறும் போது, ‘ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் வினியோகம் செய்யவில்லை. மேலும் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் வழங்கப்படவில்லை’ என்றார்.
சாம்ராஜ்நகருக்கு மைசூருவில் இருந்து ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி, சாம்ராஜ்நகருக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்ய வேண்டாம் என்று வாய்மொழியாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இதுகுறித்து அந்த  கலெக்டரிடம் கேட்டபோது, அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.
இறந்தவர்களின் உடல்கள் அடக்கம்
சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் அங்கு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இறந்தவர்களின் உடல்களை அரசே அடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. 
இதனிடையே சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story