ஒரு தவணை தடுப்பூசியிலேயே உருமாறிய கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் - ஆய்வில் கண்டுபிடிப்பு


ஒரு தவணை தடுப்பூசியிலேயே உருமாறிய கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் - ஆய்வில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 6:19 AM IST (Updated: 4 May 2021 6:19 AM IST)
t-max-icont-min-icon

ஏற்கனவே கொரோனா தாக்கியவர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி போட்டாலே உருமாறிய கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி, குயின் மேரி பல்கலைக்கழகம், பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பார்ட்ஸ், ராயல் ப்ரீ ஆகிய ஆஸ்பத்திரிகளில் இங்கிலாந்து சுகாதார பணியாளர்களுக்கு ஒரு தவணை ‘பைசர்’ நிறுவன தடுப்பூசி செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், ஏற்கனவே அறிகுறி இல்லாத, லேசான கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த உருமாறிய கொரோனாக்களில் இருந்து போதிய பாதுகாப்பு கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதே சமயத்தில், இதுவரை கொரோனா வராதவர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி மட்டும் போட்டால், போதுமான தடுப்பாற்றல் கிடைக்கவில்லை என்று தெரிய வந்தது. அவர்கள் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம், இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் ரோஸ்மேரி பாய்டன் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கு இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த உருமாறிய கொரோனாக்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், இந்த ஆய்வு முடிவுகள் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் உருவான உருமாறிய கொரோனாக்களுக்கும் பொருந்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். விஞ்ஞான பத்திரிகை ஒன்றில் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

Next Story