ஏழைகளுக்கு மாத வருமானம் அளிக்க வேண்டும்; கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்குதான் ஒரே வழி; ராகுல்காந்தி கருத்து
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்குதான் ஒரே வழி. ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு மாதாந்திர வருமானம் அளிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி யோசனை தெரிவித்துள்ளாா்.
மாத வருமானம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு, பயண கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன. இதனால், பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
எனவே, ஏழைகளை பாதுகாக்க அவர்களுக்கு குறைந்தபட்ச வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கும்வகையில் மாதந்தோறும் ஒரு தொகையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, இத்தகைய மாத வருவாய் திட்டத்தை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது
ஒரே வழிஇந்தநிலையில், நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. மத்திய அரசின் செயலற்ற தன்மை, அப்பாவி மக்களை கொன்று கொண்டிருக்கிறது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்துவதுதான் ஒரே வழி. ஊரடங்கால் ஏழைகள் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு மாத வருவாய் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.
நாட்டுக்கு எதிராக குற்றம்சற்று நேரம் கழித்து ராகுல்காந்தி மற்றொரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசிடம் எந்த வியூகமும் இல்லாததால்தான், முழு ஊரடங்கு மட்டுமே ஒரே வழி என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதைத்தவிர வேறு வழியில்லை என்ற அளவுக்கு அவர்கள் கொரோனா பரவ துணைபுரிந்து விட்டனர். நாட்டுக்கு எதிராக ஒரு குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.