பெயர் குழப்பத்தால் நேர்ந்த விபரீதம்: கொரோனா நோயாளி இறந்து விட்டதாக இன்னொருவர் உடல் ஒப்படைப்பு- தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் வேறு நபரின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி சடங்கு
பெலகாவி அருகே பெயர் குழப்பத்தால் கொரோனா நோயாளி இறந்து விட்டதாக இன்னொருவரின் உடல் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தனியார் மருத்துவமனையின் இந்த அலட்சியத்தால் வேறு நபரின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி சடங்கு நடத்திய விபரீதம் நிகழ்ந்துள்ளது.
பெலகாவி:
பெலகாவி அருகே பெயர் குழப்பத்தால் கொரோனா நோயாளி இறந்து விட்டதாக இன்னொருவரின் உடல் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தனியார் மருத்துவமனையின் இந்த அலட்சியத்தால் வேறு நபரின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி சடங்கு நடத்திய விபரீதம் நிகழ்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இறந்து...
பெலகாவி மாவட்டம் காகவாட் தாலுகா மோலே கிராமத்தை சேர்ந்தவர் பாயப்பா (வயது 82). இவருக்கு கடந்த 1-ந் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தனியார் ஆஸ்பத்திரியில் பாயப்பா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், மறுநாள் (2-ந் தேதி) பாயப்பா இறந்து விட்டதாக கூறி, அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் பாயப்பாவின் உடலும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்களும் அந்த உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்து சென்று இறுதிச்சடங்கு நடத்தி பாயப்பாவின் உடலை புதைத்தனர். பாயப்பாவின் உடல் முழுவதும் கவச உடை போடப்பட்டு இருந்ததால், அவரது முகத்தை கூட குடும்பத்தினர் சரியாக பார்க்காமல் அடக்கம் செய்திருந்தனர்.
இதற்கிடையில், கொரோனாவுக்கு பலியானதாக கூறப்பட்ட பாயப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை கண்டு ஊழியர்கள், நர்சுகள் அதிர்ச்சி அடைந்தார்கள்
உடல் தோண்டி எடுப்பு
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகி, உடனடியாக பாயப்பாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். பாயப்பா உயிர் இழக்கவில்லை என்றும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அத்துடன் பாயப்பா என்று கூறி தங்களிடம் கொடுத்த உடலை உடனடியாக ஒப்படைக்கும்படியும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
அதாவது பெலகாவி ஆட்டோ நகரை சேர்ந்த மாயப்பா என்பவரும் அதே மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாயப்பா உயிர் இழந்தாா். பாயப்பா, மாயப்பாவின் பெயர்களில் ஒரு எழுத்து மட்டுமே மாறி இருப்பதால், பெயர் குழப்பத்தில் ஊழியர்கள் உடலை மாற்றி கொடுத்த விபரீதம் தெரிய வந்தது.
ஆனால் உடலை வாங்கி சென்றிருந்த பாயப்பாவின் குடும்பத்தினர், அவரது உடல் என நினைத்து அடக்கம் செய்திருந்தனர். இதுபற்றி காகவாட் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாசில்தார் முன்னிலையில் மாயப்பாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனை நிர்வாகத்திடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
பாயப்பா உயிர் இழக்கவில்லை என்பதால், அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். உடல் மாறுவதற்கு மருத்துவமனை ஊழியர்களே காரணம் என்பது தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த இந்த சம்பவம் காகவாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story