கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண பொருட்கள் 31 மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு
கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண பொருட்கள் 31 மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியவுடன், வெளிநாடுகள் கொரோனா நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கத் தொடங்கின. முதலில், மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த பொருட்களை கையாண்டது.
அதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இதற்கென தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. இப்பிரிவு, நிவாரண பொருட்களை பெறுவதையும், அதை மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதையும் கவனித்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து 24 வகையான பொருட்கள் வந்துள்ளன. இவற்றின் மொத்த எண்ணிக்கை சுமார் 40 லட்சம் ஆகும். ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள், ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர், பேவிபிரவிர் ஆகிய மருந்துகள், முக கவசங்கள், தனிநபர் கவச உடைகள் ஆகியவை முக்கியமான பொருட்கள்.
எந்தெந்த மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள், எந்த மாநிலத்துக்கு தேவை அதிகமாக இருக்கிறது என்ற அடிப்படையில் பார்த்து, இப்பொருட்களை மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பிவைத்துள்ளது.
இதுவரை, தமிழ்நாடு உள்பட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெளிநாட்டு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story