ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தை சோதித்து பார்க்க மத்திய அரசு அனுமதி


ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தை சோதித்து பார்க்க மத்திய அரசு அனுமதி
x
தினத்தந்தி 5 May 2021 2:04 AM IST (Updated: 5 May 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்பத்தை சோதித்து பாா்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சோதனை, சீன மொபைல் போன்களில் நடத்தப்படாது.

அனுமதி
நாட்டில் தற்போது மொபைல் போன்களில் 4ஜி தொலைத்தொடர்பு சேவை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறையான 5ஜி சேவைக்கு நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 5ஜி சேவையை சோதித்து பார்க்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, எம்.டி.என்.எல். ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தன. அந்த நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை நேற்று அனுமதி அளித்தது.

தடை
ஆனால், இந்த சோதனைக்கு சீன நிறுவனங்களின் மொபைல் போன்கள் பயன்படுத்தப்படமாட்டாது. தொடக்கத்தில், சீனாவை சேர்ந்த ஹூவெய் மொபைல் போனை பயன்படுத்தப்போவதாக ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து இருந்தன.பின்னர், சீன நிறுவனங்களின் மொபைல் போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்து விட்டன. இதனால், இந்தியாவில் 5ஜி சேவையை வழங்க சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.5ஜி தொழில்நுட்ப பரிசோதனைக்கு எரிக்சன், நோக்கியா, சாம்சங், சி-டாட், ஜியோவின் சொந்த தயாரிப்பு போன் ஆகிய போன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

6 மாத கால சோதனை
5ஜி தொழில்நுட்ப சோதனை 6 மாத காலத்துக்கு நடைபெறும். நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள், நடுத்தர நகரங்கள் ஆகிய இடங்களிலும் ஒவ்வொரு நிறுவனமும் சோதனை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், நகரப்பகுதிகளில் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்று தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

மேலும், 5ஜி சோதனைக்கு தங்களிடம் உள்ள ஸ்பெக்ட்ரம்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன், பல்வேறு அலைவரிசை கொண்ட பரிசோதனை ஸ்பெக்ட்ரம்களையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story