ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார்? என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க.வில் பரபரப்பு
புதுவை சட்டமன்ற தேர்தல் முடிந்து என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சராக) ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை சந்தித்து ரங்கசாமி கடிதம் கொடுத்துள்ளார். ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துணை முதல்-அமைச்சர்என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் தற்போதைய நிலவரப்படி துணை முதல்-அமைச்சர் உள்பட 2 அமைச்சர் பதவிகளை பா.ஜ.க. கேட்டு வருகிறது. துணை முதல்-அமைச்சராக நமச்சிவாயம் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
போட்டா போட்டிமற்ற அமைச்சர் பதவி இடங்களை பிடிக்க பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. துணைத்தலைவரான சாய் சரவணன், பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் இந்த பதவியை பெற கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.இவர்களில் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதை முன்னிறுத்தி அமைச்சர் பதவியை பெறுவதில் சாய்சரவணன் உறுதியாக உள்ளார்.
இதற்கிடையே புதிதாக கட்சியில் இணைந்து காமராஜ் நகர் தொகுதியில் வெற்றிபெற்று தனது மகனையும் எம்.எல்.ஏ.வாக உருவாக்கியுள்ள ஜான்குமாரும் அமைச்சர் பதவிக்கு குறி வைத்துள்ளார். சிறுபான்மையினர் என்ற ரீதியில் இந்த முயற்சியில் அவர் இறங்கி உள்ளார். முன்னாள் அமைச்சரான கல்யாணசுந்தரமும் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
ஒரே பெண் எம்.எல்.ஏ.என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு முதல்-அமைச்சர் மற்றும் 3 அமைச்சர்கள் பதவிகள் கிடைக்கிறது. முதல்-அமைச்சராக ரங்கசாமி தேர்வாகியுள்ள நிலையில் மீதமுள்ள 3 அமைச்சர் பதவிகளை பெற அங்கும் கடும்போட்டி நிலவுகிறது. இதற்கான களத்தில் காரைக்கால் பிராந்தியத்தில் திருமுருகன், சந்திர பிரியங்கா ஆகியோர் உள்ளனர்.
மூத்த நிர்வாகி மற்றும் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த பெண் அடிப்படையில் இருவரும் கட்சி தலைமையிடம் எதிர்பார்ப்பில் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒரே எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், ராஜவேலு உள்ளிட்டோரும் ஆவலுடன் அமைச்சர் கனவில் உள்ளனர்.
எதிர்பார்ப்புஎன்.ஆர்.காங்கிரசை பொறுத்தவரை யார் யார்? அமைச்சர் ஆக வேண்டும் என்பதை ஆன்மிகவாதியான ரங்கசாமி ஜாதகம் பார்த்து அதன் அடிப்படையிலேயே தேர்வு செய்வார். அதனால் யாருக்கு அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையே மத்திய உள்துறையிடம் ஒப்புதல் பெற்று கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியை பெற பா.ஜ.க. முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில் ஓரிரு நாளில் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர்கள் யார்? என்கிற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.