தேசிய செய்திகள்

நமச்சிவாயத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி; என்.ஆர்.காங்கிரசிடம் பா.ஜ.க. வலியுறுத்தல் + "||" + Deputy CM post for Namachchivayam; BJP ask NR Congress Emphasis

நமச்சிவாயத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி; என்.ஆர்.காங்கிரசிடம் பா.ஜ.க. வலியுறுத்தல்

நமச்சிவாயத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி; என்.ஆர்.காங்கிரசிடம் பா.ஜ.க. வலியுறுத்தல்
நமச்சிவாயத்தை துணை முதல்-அமைச்சர் ஆக்குவதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.

கூட்டணி ஆட்சி

புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபைக்கு பாதிக்கு மேல் இடங்களை பெற்று இருப்பதால் ஆட்சி அமைக்கும் தகுதியை இந்த கூட்டணி பெற்றுள்ளது.

அந்தவகையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதன்பின் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சரவையில் பா.ஜ.க. இடம் பெறும் என்று தெரிவித்தார்.

துணை முதல்-அமைச்சர்

இந்தநிலையில் கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை கவர்னர் மாளிகைக்கு சென்ற ரங்கசாமி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நல்லநேரம் பார்த்து ஓரிரு நாளில் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்க திட்டமிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி இடங்களை கேட்டு பா.ஜ.க. தரப்பில் என்.ஆர்.காங்கிரசை வலியுறுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

புதுவையை பொறுத்தவரை கடந்த காலங்களில் துணை முதல்-அமைச்சர் பதவி என்பது உருவாக்கப்படாத நிலை தான் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மத்திய உள்துறை மூலம் துணை முதல்-அமைச்சர் பதவியை உருவாக்கிட பா.ஜ.க. பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

கட்சியை வளர்க்க திட்டம்

துணை முதல்-அமைச்சர் பதவியை கேட்டுப் பெற்று அந்த இடத்தில் நமச்சிவாயத்தை அமர வைக்க பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் எதிர்காலத்தில் புதுச்சேரியில் கட்சியை பெரிய சக்தியாக வளர்க்க முடியும் என்று பா.ஜ.க. தரப்பில் கருதுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதவிர அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகளை பிடிக்க பா.ஜ.க.வில் முட்டி மோதி வருகிறார்கள்.

அரசியல் சாசன விதிகளின்படி புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்துக் கொள்ளலாம் என்பதால் அந்த இடங்களை நிரப்பவும் பா.ஜ.க. மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.

என்.ஆர்.காங்கிரசிலும் தீவிரம்

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் மற்றும் 3 அமைச்சர்கள் பதவி ஏற்கலாம் என்று தெரிகிறது. அந்த பதவிகளை பெற மற்றொரு புறம் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காய் நகர்த்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி வாரிய பதவி இடங்களிலும் உடனடியாக தலைவர்களை நியமித்திடவும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அமைச்சர் மற்றும் அதிகார பதவி இடங்களை பிடிக்க என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க.வினர் தீவிரம் காட்டி வருவது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 59 ஆண்டுகளுக்குப் பின்னர் பொன்னேரி தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்
திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட பொன்னேரி தனி தொகுதியை 59 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கைப்பற்றியது.
2. முதல்-அமைச்சர் பதவிக்கு போட்டியிடவில்லை; புதுச்சேரி மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் பேட்டி
முதல்-அமைச்சர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறினார்.
3. தேர்தலில் தோற்றாலும் மனஉறுதியை இழக்கவில்லை; தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து சரி செய்வோம்; காங்கிரஸ்
தேர்தலில் தோற்றாலும் மனஉறுதியை இழக்கவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
4. அசாமில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்தது; சர்வானந்தா சோனாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்
அசாம் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்தது. சர்வானந்தா சோனாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.
5. அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை; பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலியாக்கி விடாதீர்கள்; ராகுல் காந்தி விமர்சனம்
பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலியாக்கி விடாதீர்கள். அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.