கொரோனாவின் 3-வது அலையை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் - முதன்மை அறிவியல் ஆலோசகர்


கொரோனாவின் 3-வது அலையை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் - முதன்மை அறிவியல் ஆலோசகர்
x
தினத்தந்தி 5 May 2021 6:25 PM IST (Updated: 5 May 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலையை தவிர்க்க முடியாது... நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை உச்சத்தில் உள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பெற்றுள்ள முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் பேசியதாவது,  

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் 3-வது அலையை தவிர்க்க முடியாது. வைரஸ் அதிக அளவில் பரவும் நிலையிலும் மூன்றாவது அலை எப்போது ஏற்படும் என்று தற்போது கூறமுடியாது. 3-வது அலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மாறுபட்ட கொரோனா வைரசும் உண்மையான கொரோனா போலவே பரவுகின்றன. மனிதர்கள் மூலமே கொரோனா பரவுகிறது.

தற்போதுள்ள அனைத்து வகை கொரோனா பாதிப்புக்கு எதிராகவும் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது. புதிய வகை கொரோனா வைரசை தடுப்பது குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்தியா மற்றும் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு தீவிர ஆராய்ச்சி திட்டம். இது இந்தியா உள்பட உலகநாடுகள் பலவற்றில் நடைபெற்று வருகிறது’ என்றார்.
   
சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வெளிநாடுகளில் இருந்து வரும் மருத்துவ உதவிகளை கண்காணிக்க அமைச்சரவை மட்டத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை குழுக்கள் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு தழுவிய முழு ஊரடங்கு தான் தீர்வா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிதி ஆயோக் குழுவை சேர்ந்த விகே பால், இது போன்ற யோசனைகளும் எப்பொழுதுமே விவாதிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகளுக்கு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.  

Next Story