கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள கடந்த மாதம் முதல் தயாராகி வருகிறோம் - மராட்டிய முதல்மந்திரி தகவல்


கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள கடந்த மாதம் முதல் தயாராகி வருகிறோம் - மராட்டிய முதல்மந்திரி தகவல்
x
தினத்தந்தி 5 May 2021 9:27 PM IST (Updated: 5 May 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள கடந்த மாதம் முதல் தயாராகி வருவதாக மராட்டிய முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் இன்று 57 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 80 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 41 ஆயிரத்து 596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 57 ஆயிரத்து 006 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 64 ஆயிரத்து 98 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு மராட்டியத்தில் இதுவரை 72 ஆயிரத்து 662 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது எனவும், மேலும், அந்த மூன்றாவது அலை எப்போது அல்லது எந்த நேர அளவில் நிகழும் என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கு நாம் முன்கூட்டியே தயாராக  வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருவதாக மராட்டியம் தயாராகி வருவதாக அம்மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்மந்திரி இன்று கூறியதாவது,

மத்திய அரசின் விஞ்ஞானிகள் அமைப்பு கொரோனா வைரசின் 3-வது அலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்வது தொடர்பாக மராட்டிய அரசு கடந்த மாதம் முதல் தயாராகி வருகிறது. சில மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையிலும் சில மாவட்டங்களில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

மராட்டியத்திற்கு 1700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை, அதில் 1200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மராட்டியமே உற்பத்தி செய்கிறது, எஞ்சிய 500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை பிற மாநிலங்களிடம் இருந்தும் மத்திய அரசின் உதவியுடனும் பெறப்படுகிறது. தினசரி ஆக்சிஜன் உற்பத்தியை 3000 மெட்ரிக் டன் அளவிற்கு நாம் உயர்த்த வேண்டும். ‘மிஷன் ஆக்சிஜன்’ என்ற திட்டத்தின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.

Next Story