பெங்களூருவில், தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிக்கு கொரோனா நோயாளிகளிடம் ரூ.1½ லட்சம் வசூலித்த பெண் உள்பட 2 பேர் கைது பா.ஜனதா எம்.பி. புகாரின் பேரில் போலீசார் அதிரடி
பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வாங்கி கொடுக்க கொரோனா நோயாளிகளிடம் பணம் வசூலித்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வாங்கி கொடுக்க கொரோனா நோயாளிகளிடம் பணம் வசூலித்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜனதா எம்.பி. குற்றச்சாட்டு
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் தவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு, தனியார் மருத்துவமனையில் அரசு சார்பில் ஒதுக்கப்படும் படுக்கைகளை சில இடைத்தரகர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, படுக்கை வசதி ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இதே குற்றச்சாட்டை நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சியை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி.யும் தெரிவித்திருந்தாா். இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அவர், முதல்-மந்திரி எடியூரப்பாவிடமும் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுப்பதாக கூறி பணம் வசூலிக்கும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில், ஜெயநகர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த செயலில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஜெயநகரை சேர்ந்த நேத்ராவதி என்ற நேகா (வயது 43). இவருடைய உறவினர் ரோகித் குமார் (35) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் கொரோனா நோயாளிகள் அல்லது அவர்களது உறவினர்களிடம் மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறுவார்கள். இதற்காக முதலில் தங்களது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும்படி தெரிவிப்பார்கள்.
அவ்வாறு தங்களது வங்கி கணக்குக்கு பணம் கிடைத்தவுடன், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி செய்து கொடுத்தது தெரியவந்தது. இதுவரை 4 நோயாளிகளுக்கு படுக்கை வாங்கி கொடுத்து அவர்களிடம் ரூ.1½ லட்சம் வரை வாங்கியது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதானவர்களிடம் இருந்து பணம், செல்போன்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story