கொரோனா 2-வது தடுப்பூசி 3 மாத கால இடைவெளியில் போட்டுக் கொள்வது நல்லது - முதல்-மந்திரி பினராயி விஜயன்


கொரோனா 2-வது தடுப்பூசி 3 மாத கால இடைவெளியில் போட்டுக் கொள்வது நல்லது - முதல்-மந்திரி பினராயி விஜயன்
x
தினத்தந்தி 6 May 2021 3:58 AM IST (Updated: 6 May 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா 2-வது தடுப்பூசி 3 மாத கால இடைவெளியில் போட்டுக் கொள்வது நல்லது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம், 

திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா பரவல் மிக தீவிர கட்டத்தில் உள்ளது. ஆதனால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். ஓட்டல், லாட்ஜூகள், விடுதிகள் கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் பணியில் இருந்தவர்களும் கொரோனா கள பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கொரோனா 2-வது தடுப்பூசி 3 மாத இடைவெளியில் போட்டுக் கொள்வது நல்லது என்று புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதனால், முதல் தடுப்பூசி போட்டவர்கள் அவசரப்பட தேவையில்லை.

மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் சிறை கைதிகளுக்கு 2 வார பரோல் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளான பஞ்சாயத்துகளில் இன்று (நேற்று) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கேரள மின்சார வாரியம், குடிநீர் ஆணையம் ஆகியவற்றிற்கான கட்டண வசூல் 2 மாதத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று 23106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 லட்சத்து 75 ஆயிரத்து 658 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 58 கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 5565 ஆக உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story